என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
தேனி மாவட்டத்தில் தொடர் மழை: வைகை அணை நீர் மட்டம் உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி - கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி
- தொடர் மழையால் மூல வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
- கும்பக்கரை அருவியில் சீரான அளவு தண்ணீர் வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. அக்னி நட்சத்திர காலத்தில் பெய்து வரும் இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அணைகளுக்கு தண்ணீர் வருவதாலும், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதாலும் விவசாயிகளுக்கு ஆறுதலை தந்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 117.15 அடியாக உள்ளது. வரத்து 204 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 2114 மி.கன அடி. வைகை அணையின் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழை மற்றும் மூல வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 57.49 அடியாக உள்ளது. வரத்து 113 கன அடி. திறப்பு 822 கன அடி. இருப்பு 2336 மி.கன அடி.
மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவுக்காக 750 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று அது நிறுத்தப்படும் என தெரிகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 40 அடி. வரத்து 47 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 85.77 அடி. வரத்து 24 கன அடி. திறப்பு 3 கன அடி.
பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை முதல் சீரான அளவு தண்ணீர் வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
பெரியாறு 0.6, கூடலூர் 2.2, சண்முகாநதி அணை 1.6, உத்தமபாளையம் 2.4, போடி 0.6, சோத்துப்பாறை 3 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.






