search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டது: பாளையில் புதிய உழவர் சந்தை திறப்பு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்
    X

    புதிய உழவர் சந்தையில் முதல் விற்பனையை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி. அருகில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, முன்னாள் எம்.பி. விஜிலாசத்யானந்த் மற்றும் பலர் உள்ளனர்.

    ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டது: பாளையில் புதிய உழவர் சந்தை திறப்பு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்

    • வியாபாரிகள் குறுக்கீடு இல்லாமல் நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்யும் வகையில் உழவர் சந்தை திட்டம் தொடங்கப்பட்டது.
    • விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி மற்றும் பழங்களை நேரடியாக விற்பனை செய்யும் பொருட்டு 16 கடைகள் அமைக்கப்பட்டது.

    நெல்லை:

    விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைவிக்கும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட வேளாண் விளைப் பொருட்களை இடைத்தரகர்கள், வியாபாரிகள் குறுக்கீடு இல்லாமல் நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்யும் வகையில் உழவர் சந்தை திட்டம் தொடங்கப்பட்டது.

    புதிய உழவர் சந்தை

    நெல்லை மாவட்டத்தில் பாளை மகாராஜாநகர், மேலப்பாளையம், டவுன் கண்டிகைபேரி மற்றும் அம்பை ஆகிய 4 இடங்களில் உழவர் சந்தைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில், மேலும் ஒரு உழவர்சந்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    பாளை என்.ஜி.ஓ. ஏ. காலனியில் ரூ.50 லட்சம் மதிப்பில் 5-வது உழவர்சந்தை அமைக்க திட்டமிடப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் கடந்த மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கியது. விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி மற்றும் பழங்களை நேரடியாக விற்பனை செய்யும் பொருட்டு 16 கடைகள் அமைக்கப்பட்டது.

    பணிகள் முடிவு

    மேலும் விவசாயிகள் தங்கள் பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்காக ஒரு குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணிகள் முடிக்கப்பட்டு, சி.சி.டி.வி. காமிராக்களும் அமைக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு தயாரானது.

    சமீபத்தில் நெல்லையில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாவட்டத்தில் முடிவடைந்த பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை திறந்து வைத்தார். அப்போது என்.ஜி.ஓ. ஏ. காலனி புதிய உழவர்சந்தையும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது திறக்கப்படவில்லை.

    திறப்பு விழா

    இந்நிலையில் அதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காெணாலி வாயிலாக இன்று திறந்து வைத்தார். உழவர் சந்தையில் நடந்த விழாவில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, முன்னாள் எம்.பி. விஜிலாசத்யானந்த், கவுன்சிலர் கருப்பசாமி கோட்டையப்பன் ஆகியோர் கலந்து கொண்டு முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர்.

    இதன்மூலம் ரெட்டியார் பட்டி, இட்டேரி, பருத்திப்பாடு, தருவை, முத்தூர், கருங்குளம், முன்னீர்பள்ளம், டக்கரம்மாள்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது பொருட்களை நேரடியாக விற்பனை செய்து பயன்பெறலாம்.

    மேலும் இந்த புதிய உழவர் சந்தையால் என்.ஜி.ஓ. 'ஏ', 'பி' காலனி, ரெட்டியார்பட்டி, திருமால்நகர், பொதிகைநகர், பெருமாள்புரம் பகுதி பொதுமக்கள் குறைந்த விலையில் காய்கறி, பழங்களை வாங்கலாம்.

    Next Story
    ×