என் மலர்
உள்ளூர் செய்திகள்

மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ஆர்ப்பாட்டம்
- அனைத்து பொருட்களின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளதாலும், வேலையில்லா திண்டாட்டத்தாலும் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
- மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து கிருஷ்ணகிரியில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி:
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் இதை தடுக்க தவறிய மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
அதில் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
இதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளரும், தளி சட்டமன்ற உறுப்பினருமான டி.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் லகுமய்யா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
மத்திய பா.ஜனதா ஆட்சியில் அனைத்து பொருட்களின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. அரிசி, எண்ணெய், சமையல் கியாஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் என அனைத்தின் விலையும் பல மடங்கு உயர்ந்து விட்டது.
1000, 500 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்தும், பண வசூலை குறியாக கொண்டு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.யாலும் சிறு, குறுந்தொழில்கள் முடங்கி விட்டன. அதேபோல வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித் துள்ளது.
மணிப்பூரில் 3 மாதத்திற்கும் மேலாக நடந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கில் மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த பா.ஜனதா ஆட்சியை வரும் நாடாளுமன்ற தேர்தலில் வீட்டிற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாநில குழு உறுப்பினர்கள் பழனி, மாதையன், சின்னசாமி, கண்ணு, சுந்தரவள்ளி, விவசாய சங்க மாவட்ட தலைவர் சிவராஜ், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, சக்கரவர்த்தி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சேகர் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.






