search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்
    X

    ஆலத்தூரான்பட்டி அங்கன்வாடி மையத்தை கலெக்டர் விசாகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்

    • திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பகுதியில் ரேசன் கடைகள், மாணவர் விடுதிகள் மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் விசாகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதா? என்பது குறித்தும், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்கவேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பகுதியில் ரேசன் கடைகள், மாணவர் விடுதிகள் மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் விசாகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஆதி திராவிடர் மாணவர் விடுதியை பார்வையிட்டு மாணவர்களுக்காக சமைத்து வைக்கப்பட்டு இருந்த முட்டை மற்றும் உணவுகளின் தரத்தை ஆய்வு செய்தார்.

    சமையலுக்கு எந்த வகையான எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது என்றும் கேட்டறிந்தார். ரெட்டியார்பட்டி பகுதியில் நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலை மூலம் நடத்தப்படும் ரேசன் கடையை ஆய்வு செய்தார்.

    பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்பது குறித்தும், அரிசியின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் நல மாணவிகள் விடுதியை ஆய்வு செய்து அங்கு மாணவிகளுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்படுகிறது? மாலை நேரங்களில் சிற்றுண்டி வழங்கப்படுகிறதா? எனவும் கேட்டறிந்தார்.

    கன்னிவாடி அரசு சமுதாய நல நிலையத்தை பார்வையிட்டு அங்கு டாக்டர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தேவைப்படும் வசதிகள் குறித்து அறிக்கை அனுப்பி வைக்குமாறும், வட்டார மருத்துவ அலுவலரிடம் உத்தரவிட்டார்.

    பேரூராட்சி பகுதியில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்தார். வீரப்புடையான் பட்டி பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பில் 3 மீட்டர் ஆழத்தில் நீர் தேங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கசிவு நீர் குட்டையினை ஆய்வு செய்தார்.

    மேலும் மழை நீர் வரும் வகையில் வரத்து வாய்க்கால்களை அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    ஆலத்தூரான்பட்டி அங்கன்வாடி மையத்தை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் அங்கு குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதா? என்பது குறித்தும், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா? எனவும் கேட்டறிந்தார்.

    அதன் பின் ரெட்டியார் சத்திரம் அருகே உள்ள ஆதி திராவிடர் காலனி பகுதியில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் நடக்கும் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மனோ ரஞ்சிதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×