search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி அருகே சூரிய சக்தி பம்ப் செட்டுகள் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு
    X

    சின்னமனூர் அருகே வேப்பம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி பம்ப் செட்டுகள் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார்.

    தேனி அருகே சூரிய சக்தி பம்ப் செட்டுகள் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு

    • சூரிய சக்தி பம்பு செட்டு ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • விவசாயிகள் தேனியில் செயல்பட்டு வரும் வேளாண்மை பொறியியல் துறை, செயற்பொறியாளர் அலுவலகத் தினை தொடர்பு கொண்டு பயனடைய வேண்டும் என தெரிவித்தார்.

    தேனி:

    தேனி அருகே பூமலைக்குண்டு ஊராட்சியில், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில், முதல்-அமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1.86 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி பம்பு செட்டு மற்றும் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேப்பம்பட்டி ஊராட்சியில் ரூ.2.59 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி பம்பு செட்டு ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தெரிவித்ததாவது,

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வேளாண்மை தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துகின்ற வகையில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் உள்ளிட்ட அனைத்து வேளாண் சார்ந்த துறைகளின் சார்பில் பல்வேறு வேளாண் சார்ந்த திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வேளாண் பெருங்குடிமக்களை பயன்பெற செய்து, அவர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தி வருகிறார்.

    அதனடிப்படையில், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் முதல்-அமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு இல்லாமல் பகலில் சுமார் 8 மணி நேரம் பாசனத்திற்கு தடையில்லா மின்சாரம் பெறமுடியும். விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் தமிழக அரசின் மானியம் 40 சதவீதம் மற்றும் மத்திய அரசின் மானியம் 30 சதவீதம் ஆக மொத்தம் 70 சதவீத மானியத்தில் 30 சதவீதம் விவசாயிகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் 5 எச்.பி அளவுள்ள டி.சி மோட்டார் பெற்றிட மொத்த தொகையான ரூ.2,73,548க்கு 70 சதவீத மானியமான ரூ.1,86,896-ம், 7.5 எச்.பி அளவுள்ள டி.சி மோட்டார் பெற்றிட மொத்த தொகையான ரூ.3,81,736-க்கு 70 சதவீத மானியமான ரூ.2,59,764-ம், 10 எச்.பி அளவுள்ள டி.சி மோட்டார் பெற்றிட மொத்த தொகையான ரூ.4,58,261-க்கு 70 சதவீதம் மானியமான ரூ.2,59,764-ம் வழங்கப்பட்டு வருகிறது.

    தேனி மாவட்டத்தில் 5 எச்.பி மோட்டார் 35 எண்கள் இலக்கு, 7.5 எச்.பி மோட்டார் 24 எண்கள் இலக்கு, 10 எச்.பி மோட்டார் 3 எண்கள் இலக்கு என மொத்தம் 62 பேருக்கு தற்போதைய நிதியாண்டிற்கு மட்டும் வழங்கிட ரூ.140.17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது வரை 43 பயனாளிகளுக்கு ரூ.88.02 லட்சம் மானியத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

    எனவே, மாவட்டத்திலுள்ள நீர் நிலை பாதுகாப்பான பகுதிகள் கொண்ட விவசாயிகள் மற்றும் ஆயில் எஞ்சின் பயன்பாடு உள்ள விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் தேனியில் செயல்பட்டு வரும் வேளாண்மை பொறியியல் துறை, செயற்பொறியாளர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு பயனடைய வேண்டும் என தெரிவித்தார்.

    Next Story
    ×