search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை மாநகராட்சி  தூய்மை மற்றும் பசுமை நகரமாக மாற்றப்படும்- கமிஷனர் பிரதாப் தகவல்
    X

    கோவை மாநகராட்சி தூய்மை மற்றும் பசுமை நகரமாக மாற்றப்படும்- கமிஷனர் பிரதாப் தகவல்

    • வாரம் ஒருமுறை குடிநீர் விநியோகிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
    • நாட்டில் 75 சிறந்தநகரங்களில் 4-வது சிறந்த நகரமாக கோவை உள்ளது.

    கோவை:

    கோவை மாநகரை தூய்மை மற்றும் பசுமை நகரமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் பிரதாப் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கோவை மாநகரில் ஜூலை 1-ந் தேதி முதல் மாற்றியமைக்கப்பட்ட சொத்து வரி வசூல் செய்யும் பணிநடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள தொழில் வரி தற்போது ரூ.4 கோடி வரை வசூல் செய்யப்பட்டுள்ளது.

    வரும் வாரம் முதல் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மேயர் தலைமையில் நடைபெறும். பொதுமக்கள் தங்களது புகார்களை இக்கூட்டத்தின் வாயிலாக தெரிவிக்கலாம்.

    டவுன்ஹால், நஞ்சுண்டாபுரம், புலியகுளம், ராமநாதபுரம், வ.உ.சி. பூங்கா உள்ளிட்ட இடங்களில் 24 மணி நேர குடிநீர் விநியோகம் செய்யும் திட்டத்தில் குழாய் பதிக்கும் பணிகளை 2023-ம் ஆண்டு ஜனவரிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறிச்சி பகுதி மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதி என்பதால் குடிநீர் விநியோகம் செய்யும் அளவு அதிகரிக்கப்படும்.

    மேலும், அங்கு எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு சிறப்பு திட்டம் ஏதேனும் செயல்படுத்த இயலுமா என்பதும் ஆய்வு செய்யப்படும். தேவைப்படும் இடங்களில் தண்ணீரின் அளவை அதிகரித்து வழங்கிட பூஸ்டர் பம்ப்' பொருத்தப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வாரம் ஒருமுறை குடிநீர் விநியோகிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தரமான குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறதா என்பது குறித்து மாதந்தோறும் மாதிரி குடிநீர் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்து பரிசோதனை செய்யப்படும்.

    போலந்து நாட்டில் நடைபெற்ற கருத்தரங்கில் ஸ்மார்ட் சிட்டி, நகரமைப்பு திட்டமிடுதல். தூய்மை மற்றும் பசுமை நகரம் (கிளீன் அன்ட் கிரீன் சிட்டி) குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் கோவை, கொச்சி, புவனேஸ்வர் மாநகராட்சிகள் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றோம். கோவை மாநகராட்சியை தூய்மை மற்றும் பசுமை நகரமாக மாற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

    அதற்காக சிறிது சிறிதாக திட்டமிடப்பட்டு வருகிறது. 100 வார்டுகளிலும் மியாவாகி திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் துரிதப் படுத்தப்படும். மழைநீர் சேகரிப் புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

    நாட்டில் 75 சிறந்தநகரங்களில் 4-வது சிறந்த நகரமாக கோவை உள்ளது. ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்றுள்ள வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம், திவான் பகதூர் (டி.பி.) சாலை, ரேஸ்கோர்ஸ் உள்ளிட்டவை சிறந்த பகுதிகளாக உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×