என் மலர்
உள்ளூர் செய்திகள்

1054 ஏக்கர் அறநிலையத் துறை நிலத்தை பாதுகாக்க ரூ.10.44 கோடி செலவில் மதில் சுவர்- கலெக்டர் தலைமையில் பூமி பூஜை
- சாலவான்குப்பம் முதல் நெம்மேலி வரை 10.கி.மீ தூரத்திற்கு மதில் சுவர் கட்டப்படுகிறது
- செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் பூமி பூஜை நடத்தப்பட்டது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் உள்ள ஆளவந்தார் அறக்கட்டளைக்கு கிழக்கு கடற்கரை சாலையோரம் 1054 ஏக்கர் நிலம் உள்ளது. இதை இந்து சமய அறநிலையத்துறை 10.44 கோடி ரூபாய் செலவில், பாதுகாக்கும் பொருட்டு சாலவான்குப்பம் முதல் நெம்மேலி வரை 10.கி.மீ தூரத்திற்கு மதில் சுவர் கட்டும் பணியினை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாகத் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மாமல்லபுரம் அடுத்த புலிக்குகை அருகே இதற்கான நிகழ்ச்சி மேடை அமைக்கப்பட்டிருந்தது. முதல்வர் துவக்கி வைத்ததும் உடனடியாக அங்கு பட்டாச்சாரியார் சக்ரவர்த்தி என்பவரை வைத்து இந்து முறைப்படி பூமி பூஜை நடத்தப்பட்டது. பின்னர் அப்பகுதியில் பனை மரக்கன்றுகளும் நடப்பட்டன.
இதில் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ பாலாஜி, இந்து அறநிலையத்துறை காஞ்சிபுரம் இணை ஆணையர் வாணதி, செங்கல்பட்டு உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன், செயல் அலுவலர் சக்திவேல், இதயவர்மன், பையனூர் சேகர், பட்டிபுலம் ஊராட்சி தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.






