search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க.வில் நவம்பர் மாதம்  தெளிவு பிறக்கும் - எட்டயபுரம் பொதுக்கூட்டத்தில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ.பேச்சு
    X

    கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு வழங்கிய போது எடுத்த படம். அருகில் நகர செயலாளர் ராஜகுமார் மற்றும் பலர் உள்ளனர்.


    அ.தி.மு.க.வில் நவம்பர் மாதம் தெளிவு பிறக்கும் - எட்டயபுரம் பொதுக்கூட்டத்தில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ.பேச்சு

    • எட்டயபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் கட்சியின் 51-வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும். இனி மின்கட்டணம் செலுத்த போகும் போதும் ஷாக் அடிக்கும்.

    எட்டயபுரம்:

    எட்டயபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் கட்சியின் 51-வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நலத்திட்ட உதவிகள்

    நகர செயலாளர் ராஜகுமார் தலைமை தாங்கினார். இதில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தகம் மற்றும் ஏழை- எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது :-

    சிவாஜி கணேசன், பாக்கியராஜ், டி. ராஜேந்திரன் என பலர் கட்சி ஆரம்பித்தும் காணவில்லை. விஜயகாந்த் ஆரம்பித்த தே.மு.தி.க. தேய்ந்து விட்டது. ஆனால் என்றைக்கும் நம்பர் 1 கட்சியாக நிலைத்து நிற்கும் கட்சி அ.தி.மு.க. தான்.

    நம்பர் 1 கட்சி

    அ.தி.மு.க இன்றைக்கு எதிர்கட்சியாக இருக்கலாம். ஆனால் மக்கள் உள்ளங்களில் ஆளும் கட்சி. அ.தி.மு.க.விற்கும் 3 எழுத்துக்கும் ஒரு ராசி உண்டு. அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு 3 எழுத்து, இப்போது இ.பி.எஸ்.க்கும் 3 எழுத்து. இன்னொரு வருக்கும் 3 எழுத்து தான் ஓ.பி.எஸ். ஆனால் அவருக்கு முதல் எழுத்து பூஜ்யம் என்பதால் அவர் கணக்கில் வரமாட்டார்.

    அ.தி.மு.க.வில் இன்றைக்குள்ள நிலை போன்று 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி வரும். ஆனால் எழுச்சியுடன் வெற்றி பெறும். கட்சி கொடி, சின்னம் எங்களிடம் உள்ளது. நவம்பர் மாதத்தில் அ.தி.மு.க.வில் தெளிவு ஏற்பட்டு 3-வது அத்தியாயமாக எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொதுச்செயலாளராக வருவார்.

    தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை. மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும். இனி மின்கட்டணம் செலுத்த போகும் போதும் ஷாக் அடிக்கும். தி.மு.க. ஆட்சியில் ஒரு நல்லதிட்டம் கூட வரவில்லை. நிச்சயமாக ஆட்சி மாற்றம் வரும். நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு 40-க்கு 40 அளித்தால் தி.மு.க ஆட்சி வீட்டுக்கு போய்விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×