search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில்  குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு வாகன பேரணி
    X

    பேரணியை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் சரண்யா ஜெயக்குமார் தொடங்கி வைத்த போது எடுத்தபடம்.

    நெல்லையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு வாகன பேரணி

    • குழந்தைகளை பணியில் ஈடுபடுத்தும் நிறுவனங்கள், பெற்றோர்கள் மீது நடவடிக்கை.
    • 18 வயதிற்கு கீழ் உள்ள அனைவரும் படிக்க வேண்டும்.

    நெல்லை:

    தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் இல்லா நிலையை உருவாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தையொட்டி நெல்லையில் இன்று விழிப்புணர்வு வாகன பேரணி நெல்லை அறிவியல் மையத்தில் நடைபெற்றது.

    மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, காவல்துறை சார்பில் நடைபெற்ற பேரணியை தேசிய குழந்தைகள், உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் சரண்யா ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மிகவும் அவசியம். 18 வயதிற்கு கீழ் உள்ள அனைவரும் படிக்க வேண்டும். குறிப்பாக 6 முதல் 14 வயது உடையோருக்கு கல்வி என்பது கட்டாயம்.

    குழந்தைகளை பணியில் ஈடுபடுத்தும் நிறுவனங்கள், பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    2012-ம் ஆண்டே போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது தான் அதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

    இதனால்தான் தற்போது அதிகளவிலான புகார்கள் வருகிறது. குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் 3 வாகனங்கள் மாவட்டம் முழுவதும் சென்று பொதுமக்கள் இடையே குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்.

    நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அருள்செல்வி, குழந்தைகள் நலக்குழு தலைவர் சந்திரகுமார், சைல்டு லைன் 1,098 இயக்குனர் ஞானதினகரன், மாவட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு மாரிராஜன், இன்ஸ்பெக்டர்கள் மீராள்பானு, ஷோபா ஜென்சி, ஆன்ட்ரீஜெகதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×