என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீரவணக்க நாள் பொதுக் கூட்டம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்லாவரத்தில் நாளை பேசுகிறார்
- தி.மு.க. செயலாளர் டி.ஆர்.பாலு எம்.பி.யும் இதில் பேசுகிறார்.
- மு.க.ஸ்டாலின் பல்லாவரத்தில் நாளை உரையாற்றுகிறார் என்ற செய்தி அறிந்தவுடன் மாவட்டத்தில் உள்ள தொண்டர்களும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை:
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நாளை (25-ந் தேதி) சனிக்கிழமை மாலை 5 மணியளவில் கண்டோன்மென்ட் பல்லாவரம் தெரசா பள்ளி அருகில் நடைபெறுகிறது.
காஞ்சி வடக்கு மாவட்டக் கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டம் தாம்பரம் மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ., மாவட்ட துணைச் செலாளர் பல்லாவரம் இ.கருணாநிதி எம்.எல்.ஏ. வரவேற்புரையிலும் நடைபெற உள்ளது.
இந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று எழுச்சி உரையாற்றுகிறார். தி.மு.க. செயலாளர் டி.ஆர்.பாலு எம்.பி.யும் இதில் பேசுகிறார். அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செல்வம் எம்.பி. தலைமை தீர்மானக்குழு செயலாளர் மீ.அ.வைத்தியலிங்கம், மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ், காஞ்சி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன், பம்மல் தெற்கு பகுதி கழக செயலாளர் பம்மல் வே.கருணாநிதி, திருநீர்மலை ஜெயக்குமார், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் கோல்டு பிரகாஷ், கண்டோன்மெண்ட் பாபு, ஆலந்தூர் குணாளன், சந்திரன், மாணவரணி எல்.பிரபு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் திரளாக பங்கேற்கிறார்கள்.
இந்த பொதுக் கூட்டத்தை மிக பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக மக்களின் நல்வாழ்வே தன் வாழ்வு என்று நாளும் ஓயாமல் உழைத்து வரும் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்லாவரத்தில் நாளை உரையாற்றுகிறார் என்ற செய்தி அறிந்தவுடன் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கழக தொண்டர்களும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக் கூட்டத்தை திறந்த வெளி மாநாடு போல மிகவும் எழுச்சியுடன் பிரமாண்டமான மேடை அமைத்து நடத்திட ஏற்பாடு செய்துள்ளோம். கோலாகலமாக நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் காஞ்சி வடக்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து அனைவரும் பல்லாயிரக்கணக்கில் அணி திரண்டு வந்து பங்கேற்று புதியதோர் வரலாற்றை படைத்திட வேண்டும். புதிய சரித்திரம் படைப்போம். வாரீர் வாரீர்.
இவ்வாறு அமைச்சர் தா.மோ. அன்பரசன் அறிக்கையில் கூறி உள்ளார்.






