என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழாவில் பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கினார்.
இந்தியாவிலேயே உயர் கல்வியில் தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்குகிறது பட்டமளிப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- திண்டுக்கல் அருகே காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது-
- உண்மை, ஒழுக்கம், சமமான நீதி, மதநல்லிணக்கம், ஏழைகளின் நலன், கிராம முன்னேற்றம் இவை அனைத்தும்தான் நாட்டை ஒன்றுமைப்படுத்தும் என பேசினார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது-
குஜராத்தில் பிறந்து தேச தந்தையாக வலம் வந்த காந்தியின் பெயரை தாங்கி உள்ளது இந்த பல்கலைக்கழகம். கிராம ப்புற மேம்பாட்டுக்கான அறிவாலயமாக திகழ்கிறது. காந்திக்கும் தமிழகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தனது வாழ்நாளில் 26 முறை தமிழகத்துக்கு வந்துள்ளார்.
மேலும் தமிழ் மொழியை விரும்பி கற்றவர். தனது பெயரை மோ.க.காந்தி என தமிழில் கையெழுத்திட்டார். திருக்குறளை படிப்பதற்காக தமிழ் கற்க வேண்டும். வட இந்தியர்கள் அனைவரும் ஒரு தென் இந்திய மொழியை குறிப்பாக தமிழை கற்க வேண்டும் என வலியுறுத்தியவர் காந்தி. அவர் பெயர் தாங்கிய பல்கலைக்கழக விழாவில் பிரதமர் மோடியை வரவேற்கிறேன். தமிழகத்தில் மாநில அரசு கட்டுப்பாட்டில் கலை, அறிவியல் பொறியியல், விளையாட்டு, இசை உள்பட 22 பல்கலைக்கழகம் திறம்பட இயங்கி வருகின்றன.
உயர் கல்வியில் இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்குகிறது. இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் மாநில அரசு பல்வேறு கல்வி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவை அனைத்து மாநில அரசுகளும் கவனிக்கும் திட்டங்களாக உள்ளன.
கல்வியை வளர்ச்சி அடைய செய்வது மாநில அரசின் கடமை. எனவே மாநில பள்ளி வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவி மற்றும் ஊக்கம் அளிக்க வேண்டும். மாநில பட்டியலில் இருந்த கல்வி நாட்டின் நெருக்கடி நிலையின்போது பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது.
அதை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். சமூக சேவை செய்வதே கல்வியின் ஒட்டுமொத்த இலக்கு என்று காந்தியின் கூற்றுக்கேற்ப முற்போக்கு சிந்தனையுடன் அறிவியல் சார்ந்த சமூகமாக தமிழ் சமூகத்தை கட்டமைக்க இளைஞர்களை கேட்டுக்கொள்கிறேன்.
உண்மை, ஒழுக்கம், சமமான நீதி, மதநல்லிணக்கம், ஏழைகளின் நலன், கிராம முன்னேற்றம் இவை அனைத்தும்தான் நாட்டை ஒன்றுமைப்படுத்தும். காந்தியின் நெறிமுறைகளை கடைபிடிப்பவர்களாக இளையசமுதாயம் மற்றும் மாணவர்கள் விளங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.






