search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீனவர்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறார் - அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
    X

    விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசிய காட்சி. அருகில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ் உள்ளனர்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீனவர்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறார் - அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

    • உலக மீனவர் தின விழா தூத்துக்குடி திரேஸ்புரம் மலர் அரங்கத்தில் நடைபெற்றது.
    • அமைச்சர் கீதாஜீவன் மீனவர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கபடி போட்டி, சிலம்பம் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

    தூத்துக்குடி:

    உலக மீனவர் தின விழா தூத்துக்குடி திரேஸ்புரம் மலர் அரங்கத்தில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட அண்ணா சங்குகுழி தொழிலாளர் நலச்சங்க தலைவர் இசக்கிமுத்து தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பாரதி முன்னிலை வகித்தார். ரீகன் வரவேற்றார்.

    நலத்திட்ட உதவிகள்

    வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் மீனவர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கபடி போட்டி, வாலிபால் போட்டி, சிலம்பம் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி நிவாரண உதவியாக ஒரு பெண்ணுக்கு ரூ. 20 ஆயிரம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    மீனவர் தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பல்வேறு நிகழ்ச்சிகள் பொது அமைப்புகள் மூலம் சிறப்பாக நடைபெறுகிறது. பொதுமக்களுக்காக பணியாற்றுவதே பெருமை தான். அதே வேளையில் பொதுமக்களின் மகிழ்ச்சி தான் எனது மகிழ்ச்சி. ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற விழா எடுக்க வேண்டும் என்றால், ஆண்டுதோறும் இணைந்து எல்லோரும் பணியாற்ற வேண்டும்.

    19 ஆயிரம் லிட்டர் டீசல்

    இயற்கையின் எதிர்ப்பு அலையோடும், சூரியன் நிலவு என சூழ்நிலைகள் மாறும் போது, நிலவின் வெளிச்சத்தில் பணி செய்கிறார்கள். சூரியன் உதித்த போது ஓய்வில் இருக்கிறார்கள். இயற்கையாகவே எதிர்ப்பு வாழ்க்கையாக கொண்டு தொழிலாளர்கள்படும் கஷ்டத்தை பலரின் மூலமாக தெரிந்து கொண்டேன்.

    திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் நிதி ஓதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன. அதை விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். திரேஸ்புரம் பகுதியில் தள்ளுவண்டி மூலம் குடிதண்ணீர் எடுத்து வந்த பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் அனைத்துப் பகுதிக்கும் குடிநீர் வசதியை நான் செய்து கொடுத்துள்ளேன். உங்களுக்கு முதல்-அசை்சர் கொடுத்த வாக்குறுதியின்படி மானிய விலையில் 18 ஆயிரம் லிட்டர் டீசல் வழங்கியதை 19 ஆயிரம் லிட்டராக உயர்த்தியும், நாட்டுப்படகுகளுக்கு 4 ஆயிரம் லிட்டரில் இருந்து 4 ஆயிரத்து 400 லிட்டராக உயர்த்தி டீசல் வழங்கப்பட்டுள்ளது.

    கலைஞர் வழியில்

    1996-ம் ஆண்டில் கட்டப்பட்ட சிங்காரவேலர் குடியிருப்பு பகுதியில் குடியிருப்பவர்களுக்கு பட்டாவை முதல்-அமைச்சர் வழங்கியுள்ளார். நமது மாவட்டத்திலும் 160 பேருக்கு விரைவில் வழங்கப்படும். சுனாமி குடியிருப்பு பகுதிகளுக்கும் பட்டா வழங்கப்படும். கலைஞர் வழியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீனவர்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறார். எனவே அனைவரும் முதல்-அமைச்சருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக திரேஸ்புரம் பங்கு தந்தை அமல்ராஜ், மீனவர் தினத்தை முன்னிட்டு தொழிலாளர்கள் இயற்கையோடும், செயற்கையோடும் வாழ்பவர்களை பாதுகாத்து தொழில் சிறந்த முறையில் நடைபெற வேண்டும் என்று கூட்டுப்பிரார்த்தனை செய்தார்.

    விழாவில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், வியாபாரிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி, செயலாளர் பாஸ்கர், பொருளாளர் ராஜலிங்கம், பேராசிரியர் பாத்திமா பாபு, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதாதேவி, பகுதி செயலாளர்கள் மேகநாதன், ஜெயக்குமார், மாநகர அயலக அணி அமைப்பா ளர் வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் நிக்கோலாஸ் மணி, கவுன்சிலர்கள் பவானி மார்ஷல், ஜெயசீலி, வைதேகி, நாகேஸ்வரி, வட்டச்செயலாளர் ரவிசந்திரன், வட்டப்பிரதிநிதி ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி நாராயணன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் செந்தில்குமார், முன்னாள் கவுன்சிலர் அமாலுதீன், முத்தரையர் நலச்சங்க தலைவர் சந்தனசெல்வம், மீனவர்கள் பரமசிவம், அண்ணாதுரை மற்றும் பெல்லா, பாஸ்கர், பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×