என் மலர்
உள்ளூர் செய்திகள்

மத்திய அரசின் திட்டங்களை பெற்று தருவதாக பொதுமக்களிடம் மோசடி: அரசியல் கட்சி பிரமுகர் குறித்த ஆடியோவால் பரபரப்பு
- அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர், பொதுமக்க ளிடம் பணம் வசூலித்து மோசடி செய்வதாக புகார் எழுந்துள்ளது.
- 2 பேர் பேசிக் கொள்ளும் உரையாடல் அடங்கிய ஆடியோ ஒன்று வாட்ஸ் அப் குழுக்களில் வைரல் ஆகி வருகிறது.
கிருஷ்ணகிரி,
மத்திய அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பிரதமரின் பல்வேறு திட்டங்களுக்கு மானியங்கள் வழங்கப்படுகிறது. இந்த திட்டங்களை பெற்று தருவதாக கூறி, கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர், பொதுமக்க ளிடம் பணம் வசூலித்து மோசடி செய்வதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக 2 பேர் பேசிக் கொள்ளும் உரையாடல் அடங்கிய ஆடியோ ஒன்று வாட்ஸ் அப் குழுக்களில் வைரல் ஆகி வருகிறது.
அதில் ஒரு முனையில் பேசும் நபர், மற்றொரு முனையில் பேச கூடிய பெண்ணிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அந்த நபரிடம் பேசும் பெண் மானிய அடிப்படையிலான போர்வெல் திட்டத்தில் பயன் பெற வேப்பனப்பள்ளி பகுதியை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகரிடம் ரூ.7,500 கொடுத்ததாகவும், அவர் அந்த பணத்தை பெற்றுக் கொண்டு, பிறகு ஆடிட்டரிடரிடம் கடிதம் பெற்று, ஆவணங்களை பெற்று வாருங்கள் என கூறினார்.
பணமும் கொடுத்து எதற்காக நான் உங்களிடம் ஆவணங்கள் தர வேண்டும் என்று கூறினேன். என்னை போல பலரும் பணம் கொடுத்துள்ளார்கள். என்னிடம் மற்றவர்களுக்கு ரூ.20 ஆயிரம், நீங்கள் ரூ.15 ஆயிரம் தாருங்கள் என கேட்டார். நான் ரூ.7,500 தான் கொடுத்தேன். மீதி பணத்தை கொடுக்கவில்லை. அவர் என்னிடம் பிறரையும் அறிமுகப்படுத்தி பணம் வாங்கி தாருங்கள் என கூறினார்.
எனக்கே வேலையை முடித்து தரவில்லை. பின்னர் எப்படி நான் மற்றவர்களை அறிமுகப்படுத்த முடியும். எனக்கு அவர் மீது நம்பிக்கை இல்லை. பிறகு என் மூலம் பணம் கொடுத்தவர்கள் என்னை வந்து தொந்தரவு செய்யவா? இவ்வாறு அந்த பெண் கூறி தனது உரையாடலை முடித்துக் கொள்கிறார். இந்த உரையாடல் ஆடியோ வாட்ஸ் அப் குழுக்களில் வேகமாக பரவி வருகிறது.






