என் மலர்
உள்ளூர் செய்திகள்

பகுதி சபா கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
உடன்குடி 3-வது வார்டில் தொல்லை செய்யும் குரங்குகளை பிடிக்க வேண்டும் - பகுதி சபா கூட்டத்தில் பெண் வேண்டுகோள்
- உடன்குடி பேரூராட்சி வார்டுகள் மற்றும் செட்டியாபத்து ஊராட்சியில் மக்கள் குறைகேட்கும் பகுதி சபா கூட்டம் நேற்று நடைபெற்றது
- குப்பைகளை தெருவில் வீசாத வண்ணம் வீட்டிலேயே சேகரிக்கும் வகையில் குப்பைத் தொட்டிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது
உடன்குடி:
உடன்குடி பேரூராட்சி வார்டுகள் மற்றும் செட்டியாபத்து ஊராட்சியில் மக்கள் குறைகேட்கும் பகுதி சபா கூட்டம் நேற்று நடைபெற்றது.
உடன்குடி பேரூராட்சி 3-வது வார்டில் உறுப்பினர் மும்தாஜ் பேகம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவி ஹூமைரா அஸ்ஸாப் கல்லாசி, துணைத்தலைவர் மால்ராஜேஷ், பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினர் ஜான்பாஸ்கர் மற்றும் சுயம்புராஜ், முகமது சலீம், காஜா முகைதீன், முத்துகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 3-வது வார்டில் உள்ள மக்களிடம் குறைகள் கேட்டறியப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. அப்போது ஒரு பெண் திடீர் என எழுந்தார். தங்கள் வீட்டில் பால் பாக்கெட் தினசரி வீட்டு வாசலில் உள்ள பையில் போடுகின்றனர். ஆனால் உடனே அங்கு சுற்றி திரியும் குரங்கு அதை தூக்கி சென்று விடுகிறது. இதனால் பல நாள் காலையில் காபி குடிக்க முடியாமல் அவதிப்படுகிறேன் என்று அவர் கூறினார். இதனால் கூட்டத்தில் சிரிப்பலை ஏற்பட்டது. இதற்கு விளக்கம் அளித்த பேரூராட்சி கவுன்சிலர் பேரூராட்சி மூலமாக ஆடு, மாடு, பன்றி, நாய்கள் ஆகியவற்றை பிடிப்பதற்கு மட்டுமே பேரூராட்சிக்கு அனுமதி உள்ளது. குரங்கை பிடிக்க வனத்துறைக்கு சிபாரிசு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். பின்னர் குப்பைகளை தெருவில் வீசாத வண்ணம் வீட்டிலேயே சேகரிக்கும் வகையில் குப்பைத் தொட்டிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.உடன்குடி சோமநாதபுரத்திலும் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.செட்டியாபத்து ஊராட்சி தேரியூரில் ஊராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மக்களிடம் குறைகள் கேட்கப்பட்டது.