search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவதூறாக பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு
    X

    புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவதூறாக பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு

    • பிரசார கூட்டத்தில் சீமான் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராகவும் அச்சுறுத்தும் வகையிலும் பேசியதாக புகார் செய்யப்பட்டது.
    • சீமானுக்கு எதிராக குறிப்பிட்ட பிரிவினர் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த மாதம் 13-ந் தேதி பிரசாரம் செய்தார்.

    அப்போது அவர் திருநகர் காலனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒரு பிரிவினர் குறித்து சர்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் எழுந்தது.

    இதையடுத்து சீமானுக்கு எதிராக குறிப்பிட்ட பிரிவினர் சாலை மறியல் போராட்டம் செய்தனர். மேலும் இது தொடர்பாக விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையமும் நாம் தமிழர் வேட்பாளருக்கு உத்தரவிட்டு இருந்தது.

    இந்த நிலையில் குறிப்பிட்ட சமுதாயத்தின் சார்பில் சீமான் மீது கருங்கல்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் சீமான் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் அதே பிரசார கூட்டத்தில் சீமான் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராகவும் அச்சுறுத்தும் வகையிலும் பேசியதாக புகார் செய்யப்பட்டது. இது தொடர்பான வீடியோவை அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் வெளியிட்டு ஏன் சீமான் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

    இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் கொடுத்த புகாரின் பேரில் தொடரப்பட்ட வழக்கில் கூடுதலாக புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பற்றி அவதூறாக பேசியதாகவும், அச்சுறுத்தும் வகையில் பேசியதாகவும் சீமான் மீது கூடுதலாக இன்று கருங்கல்பாளையம் போலீசார் 153 (பி), (1சி), 505 (1சி), 506 (1) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    Next Story
    ×