என் மலர்
உள்ளூர் செய்திகள்

போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக ஊராட்சி செயலாளர் மீது வழக்கு
- 10-ம் வகுப்பில் 27 மதிப்பெண்கள் எடுக்கப்பட்டு 47 ஆக திருத்தம் செய்யப்பட்டது.
- குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை.
தருமபுரி,
பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு தேர்ச்சி பெறாமல் தேர்ச்சி பெற்றதாக போலியான மதிப்பெண் சான்றிதழை அளித்து பணியில் சேர்ந்ததாக நல்லம்பள்ளி தாசில்தார் தருமபுரி எஸ்.பி. அலுவலகத்தில் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எர்ரபையனஅள்ளி ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருபவர் கார்த்திகேயன். இவர் தருமபுரி மாவட்டம் பங்கு நத்தம் அடுத்த பண்டஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துவிட்டு 16.5.1998-ம் வருடம் முதல் நல்லம்பள்ளி ஊராட்சி அலுவலகத்தில் செயலாளராக பணிக்கு சேர்ந்து பணிபுரிந்து வந்ததாகவும் அவருடைய 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை உண்மை தன்மை அறியும் பொருட்டு தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அரசு தேர்வுகள் துறை உதவி இயக்குனருக்கு அனுப்பியும் அவர்கள் மூலமாக சென்னைக்கு அனுப்பி 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை சரிபார்க்கப்பட்டது.
அதில் கார்த்திகேயன் பத்தாம் வகுப்பு ஆங்கில பாடத்தில் 27 மதிப்பெண்கள் எடுக்கப்பட்டு அதனை திருத்தம் செய்யப்பட்டு 47 மதிப்பெண் பெற்றுள்ளதாக பொய்யான சான்றிதழை கொடுத்து பணியில் சேர்ந்து உள்ளதாக தெரியவந்தது. அதன் பேரில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறினார். அதன் அடிப்படையில் தருமபுரி எஸ்.பி. ஸ்டீபன் ஜோசப் பாதம் உத்தரவின் பெயரில் தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கார்த்திகேயன் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






