search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலதிபரை கடத்திய கூலிப்படைக்கு உடந்தையாக இருந்த காவலாளி தற்கொலையால் திடீர் திருப்பம் - முக்கிய குற்றவாளிகளுக்கு வலை
    X

    கோப்பு படம்

    தொழிலதிபரை கடத்திய கூலிப்படைக்கு உடந்தையாக இருந்த காவலாளி தற்கொலையால் திடீர் திருப்பம் - முக்கிய குற்றவாளிகளுக்கு வலை

    • தொழிலதிபர வேனில் வந்த 2 பேர் அவரை தாக்கி கண்களைக் கட்டி கடத்திச் சென்றனர்.
    • உடந்தையாக இருந்த காவலாளி தற்கொலை செய்ததால் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி பகுதியை சேர்ந்தவர் அதிசயம் (வயது 70). மொத்த பிராய்லர் கோழிக்கறி வியாபாரம், முட்டை உள்ளிட்ட தொழில்கள் செய்து வருகிறார். சொந்த விவசாய தோட்டங்களும் உள்ளது.

    நேற்றுகாலை ஆணைமலையன்பட்டி தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வேனில் வந்த 2 பேர் அவரை தாக்கி கண்களைக் கட்டி கடத்திச் சென்றனர். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மாவட்ட எஸ்.பி. பிரவீன் உமேஸ் டோங்கரே உத்தரவின் பேரில் அவரை கடத்திச் சென்ற காரை மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகளில் தீவிரமாக தேடினர். ஆண்டிபட்டி புள்ளிமான் கோம்பை ரோடு வழியாக சென்ற வாகனத்தை போலீசார் துரத்திச் சென்றபோது வைகை புதூர் பிரிவில் கடத்தல் கும்பல் அதிசயத்தை கீழே தள்ளிவிட்டு சென்றனர். இதில் படுகாயம் அடைந்த அதிசயத்தை சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான்பாட்சா மீட்டு க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தார்.

    இதனிடையே வாகனம் வைகைபுதூர் வழியாக தப்பிச் செல்வதை வயர்லெஸ் மூலம் தகவல் தெரிவித்ததின் பேரில் ஜெயமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் ஒத்தவீடு வழியாக சென்ற அந்த வாகனத்தை மேலக்காமக்காபட்டியில் வைத்து பிடித்தனர். அந்த காரை மதுரை மாவட்டம் திருநகர் சக்களைப்பட்டி நடுத்தெருவை சேர்ந்த தர்மராஜ் மகன் பிரபு (31) என்பவர் ஓட்டிச்சென்றார்.

    அவரை பிடித்து விசாரித்ததில் மதுரை திருப்பரங்குன்றம் பாலாஜிநகரை சேர்ந்த திருமுருகன் மகன் அஜீத் (26), அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் கவுசிகன் (22) மற்றும் கூழ் என்ற அழகுசுந்தரம், திருப்பதி ஆகியோர் கூலிப்படையாக இருந்து அதிசயத்தை கடத்தியதாகவும் போலீசார் தங்களை சுற்றி வளைத்ததால் வேறு வழியின்றி அதிசயத்தை கீழே தள்ளிவிட்டதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.

    இந்நிலையில் அதிசயம் தோட்டத்தில் காவலாளியாக வேலைபார்த்த சங்கரலிங்கம் (65) என்பவர் நேற்று மாலை தனது வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். நாராயணதேவன்பட்டி நடுத்தெருவை சேர்ந்த சங்கரலிங்கம் கடந்த 3 மாதமாகத்தான் இங்கு வேலை செய்து வந்தார். இவரது முதல் மனைவி அங்காளஈஸ்வரி இறந்து விட்டதால் அவரது தங்கையான மீனா (46) என்பவரை 2வது திருமணம் செய்துகொண்டு ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள அதிசயத்திற்கு சொந்தமான தோப்பு வீட்டில் வசித்து வந்துள்ளார்.

    அதிசயத்தை கடத்திய கூலிப்படை பிடிபட்ட சம்பவம் அறிந்ததும் சங்கரலிங்கம் தற்கொலை செய்து கொண்டார். இதனால் கடத்தல் கும்பலுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்து வந்தது. சங்கரலிங்கத்தின் செல்போனில் கடத்தல்காரர்களின் செல்போன் எண்கள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. எனவே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் கூலிப்படை பிடிபட்டுள்ள நிலையில் கடத்தலுக்கு மூளையாக இருந்தது யார் என்ற கோணத்திலும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். கடத்தலில் ஈடுபட்ட கூலிப்படையினரை துரித வேகத்தில் பிடித்த போலீசாரை மாவட்ட எஸ்.பி. பாராட்டினார்.

    Next Story
    ×