search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலைக்கு சேர்ந்த ஒரு மாதத்தில் ஐ.டி. பெண் ஊழியரின் உயிரை பறித்த கட்டிட விபத்து... உருக்கமான தகவல்

    • அண்ணா சாலையில் பழமையான கட்டிடம் இடிக்கப்பட்டபோது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது
    • பத்ம பிரியா இறந்ததை கேள்விப்பட்டு அலுவலக ஊழியர்கள் மற்றும் தோழிகள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

    சென்னை:

    சென்னை அண்ணா சாலையில் இன்று காலையில் பழமையான கட்டிடத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இளம்பெண் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை அண்ணா சாலையில் உள்ள ஆனந்த் தியேட்டர் அருகில் பழமையான கட்டிடம் ஒன்று நீண்ட காலமாக ஆபத்தான முறையில் இருந்து வந்தது. இதனை இடிக்கும் பணி இன்று காலை 9 மணி அளவில் நடைபெற்றது.

    ஜே.சி.பி. எந்திரங்களின் உதவியுடன் கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது கட்டிடத்தின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து சாலையோரமாக விழுந்தது. அப்போது பயங்கர சத்தம் கேட்டது.

    காலை நேரம் என்பதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. அண்ணா சாலையில் உள்ள நிறுவனங்களில் பணிபுரிந்து வருபவர்கள் வேக வேகமாக தங்களது அலுவலகங்களுக்கு சென்று கொண்டிருந்தனர்.

    காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்த கட்டிடத்தின் அருகில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்த 22 வயது நிரம்பிய பத்ம பிரியா மற்றும் அதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் விக்னேஸ் குமார் இருவரும் அந்த வழியாக சென்று கொண்டிருந்தனர். பலத்த சத்தத்துடன் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தபோது இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

    அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து மீட்பு பணியை முடுக்கி விட்டனர்.

    இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட இருவரையும் பத்திரமாக மீட்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டன. இதனால் அண்ணா சாலை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கட்டிட இடிபாடுகளை மீட்பு படையினர் அகற்றி பார்த்தனர். அப்போது ஐ.டி. பெண் ஊழியரான பத்ம பிரியா பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் காணப்பட்டார். வாலிபர் விக்னேஷ் குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டருந்தது.

    உடனடியாக பத்ம பிரியாவை ஆம்புலன்சில் ஏற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பத்ம பிரியா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு அவரது அலுவலக ஊழியர்கள் மற்றும் தோழிகள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

    திடீரென ஏற்பட்ட கட்டிட விபத்தில் இளம்பெண் பத்ம பிரியா உயிரிழந்த சம்பவம் அவரது பெற்றோர், உறவினர்கள் மத்தியிலும் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பத்ம பிரியா பற்றி உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளன.

    பத்ம பிரியாவின் சொந்த ஊர் மதுரை உசிலம்பட்டி ஆகும். தந்தை பெயர் பாண்டி முருகேசன். தாய் பாண்டி முருகேஸ்வரி. பத்ம பிரியா ஐ.டி. படிப்பை முடித்து விட்டு வேலை தேடிக்கொண்டிருந்தார்.

    இந்த நிலையில் தான் அண்ணா சாலையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பத்ம பிரியா கடந்த டிசம்பர் மாதம் வேலைக்கு சேர்ந்து உள்ளார். பெற்றோரும் தங்கள் மகளை ஆசை ஆசையாக சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    பத்ம பிரியாவின் சித்தி வீடு பல்லாவரம் அருகில் உள்ள பம்மலில் உள்ளது. அங்கு தங்கி இருந்து தான் தினமும் இவர் வேலைக்கு சென்று வந்தார். மெட்ரோ ரெயிலில் ஆயிரம் விளக்கு வந்து அங்கிருந்து சுரங்கப்பாதை வழியாக அலுவலகத்துக்கு நடந்து செல்வதை பத்ம பிரியா வழக்கமாக வைத்திருந்தார்.

    இன்று காலையிலும் அது போன்று அவர் நடந்து சென்றார். அப்போது தான் திடீரென இடிந்து விழுந்த கட்டிட சுற்றுச்சுவர் பத்ம பிரியாவின் உயிரை பறித்ததும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பொது இடங்களில் பழமையான கட்டிடங்களை இடிக்கும்போது யாருக்கும் ஆபத்து ஏற்படாத வகையில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஆனால் தனியார் கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் எந்தவித முன் எச்சரிக்கை ஏற்பாடுகளையும் செய்யாமல் கட்டிடத்தை இடித்துள்ளனர். இதன் காரணமாகவே அநியாயமாக இளம்பெண் ஒருவரின் உயிர் ஒரு நொடியில் பறிக்கப்பட்டு உள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பத்ம பிரியா உயிரிழப்புக்கு காரணமான நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். கட்டிட விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×