என் மலர்
உள்ளூர் செய்திகள்

தர்காவுக்குள் செல்ல முயன்ற பா.ஜ.க.வினர் கைது
- மறியலில் ஈடுபட்ட 25-க்கும் மேற்பட்டோரை வேனில் ஏற்றி புதூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
- ஜமால் சித்திக் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
மதுரை:
பா.ஜனதா சிறுபான்மை பிரிவு தேசிய தலைவர் ஜமால் சித்திக் நேற்று மதுரை வந்தார். அவருடன் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், மாநில தலைவி டெய்சி தங்கையா, மாநில பொதுச்செயலாளர் கல்வாரி தியாகராஜன் உள்பட நிர்வாகிகள் பலரும் வந்திருந்தனர். இந்த தலைவர்கள் கோரிப்பாளையம் தர்காவுக்கு செல்ல முயன்றனர்.
அதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் பா.ஜனதா போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பா.ஜனதா நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் மறியலில் ஈடுபட்ட 25-க்கும் மேற்பட்டோரை வேனில் ஏற்றி புதூர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அதனை தொடர்ந்து மாநகர் மாவட்ட தலைவர் மகா. சுசீந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள், காவல் நிலையத்திற்கு திரண்டு வந்து போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பினர். பா.ஜ.க. தலைவர் எச்.ராஜாவும், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து போலீசார் அனுமதியின்றி கோரிப்பாளையம் தர்காவுக்கு செல்ல முயன்றது, சாலை மறியலில் ஈடுபட்டது உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஜமால் சித்திக் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்பு அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.






