search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேசின் பாலம் நடைபாதையில் வாகன ஓட்டிகள் சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம்- கழிவறை கட்ட பொதுமக்கள் கோரிக்கை
    X

    பேசின் பாலம் நடைபாதையில் வாகன ஓட்டிகள் சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம்- கழிவறை கட்ட பொதுமக்கள் கோரிக்கை

    • துர்நாற்றம் காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்தபடியே நடந்து செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது.
    • ஒருபுறமிருக்க நடை பாதை உடைந்தும் காணப்படுகிறது.

    சென்னை:

    வடசென்னையின் முக்கிய பகுதியாக திகழ்வது பேசின் பாலம்.

    வடசென்னை பகுதி வாசிகள் மட்டுமின்றி, மாதவரம், புழல், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வருபவர்களும் இந்த பாலத்தை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

    வால்டாக்ஸ் ரோடு மற்றும் சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு செல்பவர்களும் பெரியமேடு, வேப்பேரி பகுதிக்கு வருபவர்களும் இந்த வழியாகவே வருகிறார்கள். பேசின் பாலம் அருகில் உள்ள நடைபாதை வழியாக சென்று அருகில் உள்ள பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்துக்கு பயணிகள் சென்று வருகிறார்கள்.

    இந்நிலையில் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் நடை பாதையை திறந்தவெளி சிறுநீர் கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

    அவசரத்துக்கு சாலையோரமாக வண்டியை நிறுத்தி விட்டு சிறுநீர் கழித்துவிட்டு செல்வதை பெரும்பாலானோர் வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள்.

    இதனால் நடைபாதையில் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருப்பதுடன் துர்நாற்றம் வீசுகிறது. இதனை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சிறுநீர் கழிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்த போதிலும் சிறுநீர் கழிப்பவர்களை மட்டும் கட்டுப்படுத்துவது என்பது சவாலாகவே உள்ளது.

    இது தொடர்பாக பேசின் பால பகுதியை அதிகமாக பயன்படுத்தும் பொதுமக்கள் சிலர் கூறும்போது, நடை பாதையில் சிறுநீர் கழிப்பதை தடுக்க தடுப்பு வேலிகள் போன்று அமைத்தால் அது பலன் அளிக்கும்.

    அதே நேரத்தில் கழிவறை கட்டி கண்காணித்தாலும் சிறுநீர் கழிப்பதை தடுக்க முடியும் என்றனர். சிறுநீர் கழிப்பதால் வீசும் துர்நாற்றம் காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்தபடியே நடந்து செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது.

    இது ஒருபுறமிருக்க நடை பாதை உடைந்தும் காணப்படுகிறது. இதனை சரி செய்து மக்கள் சிரமமின்றி நடைபாதையில் நடந்து செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×