என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடிப்பூர திருவிழாவையொட்டி நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம்
    X

    நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடந்தபோது எடுத்தபடம்.

    ஆடிப்பூர திருவிழாவையொட்டி நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம்

    • தினமும் இரவு சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் அம்பாள் எழுந்தருளியதும் உள்வீதி உலா நடைபெறுகிறது.
    • இதில் குழந்தை பாக்கியம் வேண்டி பக்தர்கள் வளையல் காணிக்கை வழங்கினர்.

    நெல்லை:

    பிரசித்தி பெற்ற நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இதில் சிறப்பு வாய்ந்த திருவிழாக்களில் ஒன்றான ஆடிப்பூர திருவிழா கடந்த 22-ந் தேதி அம்பாள் சன்னதியில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்று வருகிறது. மேலும் தினமும் இரவு சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் அம்பாள் எழுந்தருளியதும் உள்வீதி உலா நடைபெறுகிறது.

    4-ம் திருவிழாவான இன்று நண்பகல் 12 மணிக்கு அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெற்றது.

    இதில் குழந்தை பாக்கியம் வேண்டி பக்தர்கள் வளையல் காணிக்கை வழங்கினர். தொடர்ந்து வளைகாப்பு வைபவ சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, வளையல் பிரசாதமாக வழங்கப்பட்டது. இன்று இரவு 8 மணிக்கு சுவாமி- அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா நடைபெறுகிறது.

    10-ம் திருவிழாவான வருகிற 31-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணி முதல் இரவு 7.30-க்குள் அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு முளைக்கட்டு வைபவம் நடைபெறுகிறது.

    இதில் பக்தர்கள் குழந்தை பாக்கியம் வேண்டி நவதானியங்கள், பலகாரங்களை கொண்டு அம்பாள் மடி நிரப்புதலை தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×