என் மலர்
உள்ளூர் செய்திகள்

வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் ஆவணி தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்தபடம்.
திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் ஆவணி தேரோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
- திருவிழா கடந்த 10-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி 20-ந் தேதி வரை 11 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.
- 11-ம் திருவிழாவான நாளை (புதன்கிழமை) பெருமாள் தாயார் பல்லக்கில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு 6மணிக்கு வெட்டி வேர் சப்பரம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
தென்திருப்பேரை:
நவதிருப்பதி தலங்களில் 8-வது தலமானதும், செவ்வாய் தலமும், நிதியை இழந்த குபேரனுக்கு அவனிழந்த செல்வத்தை தேடி எடுத்துக்கொண்டு, பின்னர் குபேரன் வணங்கும் ஜோதியாய் அருள் பாலித்த தலமாகவும் திருக்கோளூர் வைத்த மாநிதி பெருமாள் கோவில் விளங்கி வருகிறது. இங்கு வைத்தமாநிதி பெரு மாள் தலைக்கு மரக்கால் கொண்டு சயன கோலத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். மேலும் மதுரகவி ஆழ்வார் அவதரித்த தலமும் ஆகும்.
கொடியேற்றம்
ஆவணி பெருந்திரு விழாவை முன்னிட்டு காலையில் உற்சவர் வைத்தமாநிதி மற்றும் மதுரகவி ஆழ்வார் இருவரும் கொடிமரம் அருகில் எழுந்தருளினர். அதை தொடர்ந்து கொடிபட்டம் மாடவீதியை வலம் வந்து கொடியேற்றம் நடந்தது.
திருவிழா கடந்த 10-ந் தேதி காலை கொடி யேற்றத்துடன் தொடங்கி 20-ந் தேதி வரை 11 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. தினசரி காலை வைத்தமாநிதி பெருமாள் மாடவீதி எழுந்தருளல், இரவு இந்திர வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், அன்ன வாகனம், யானை வாகனம், குதிரை வாகனங்களில் வீதி உலா நடைபெற்று வருகிறது.
கருடசேவை
5-ம் நாள் திருவிழாவான கருடசேவையை முன்னிட்டு வைத்தமாநிதி பெருமாள் கருடவாகனத்திலும், மதுரகவி ஆழ்வார் அன்னவாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 9-ம் திருவிழாவான நேற்று சுவாமி நம்மாழ்வார் எழுந்தருளல் நிகழ்ச்சியும், சுவாமி மதுரகவி ஆழ்வார் எதிர்கொண்டு அழைத்தல் மங்களாசனம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாலை 7 மணிக்கு தேர் கடாஷித்தல், பல்லக்கில் சுவாமி நம்மாழ்வார் ஆஸ்தானம் திரும்புதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தேரோட்டம்
10 நாள் திருவிழாவான இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணியளவில் சுவாமி தேரில் எழுந்தருளல், அதைத்தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. திரளான பொது மக்கள், பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா கோபாலா என கரகோசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனர். இன்று இரவு 6 மணிக்கு பல்லக்கில் தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
11-ம் திருவிழாவான நாளை (புதன்கிழமை) பெருமாள் தாயார் பல்லக்கில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு 6மணிக்கு வெட்டி வேர் சப்பரம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவல மணிகண்டன், ஆய்வாளர் லோகநாயகி, இளநிலை பணியாளர் பெருமாள் ஆகியோர் செய்திருந்தனர். அர்ச்ச கர்கள் பாலாஜி, ரகு, சுந்தரம் சீனிவாசன், தலத்தார்கள் திருவாயமொழிப்பிள்ளை, ஸ்ரீதரன், சடகோபன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி, முன்னாள் கவுன்சிலர் நாகமணி மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.