search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஞ்சநதிக்கோட்டையில், நேரடி நெல்கொள்முதல் பெருநிலையம் அமைக்கப்படும்
    X

    நெல் மூட்டைகளின் இருப்பு குறித்து உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புதுறை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

    பஞ்சநதிக்கோட்டையில், நேரடி நெல்கொள்முதல் பெருநிலையம் அமைக்கப்படும்

    • நெல் தூற்றுவது முதல் சாக்கு மூட்டையில் நெல்லை நிரப்பி தைப்பது வரை முழுவதும் எந்திரங்களை பயன்படுத்த முடிவு.
    • புதிய நியாய விலைக் கடைகளை உருவாக்குவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்பட்ட மேற் கூரையுடன் கூடிய நெல்சேமிப்பு தளங்களை உணவு, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு துறை கூடுதல் தலைமைச் செயலர்
    ஜெ.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    நெல் சேமிப்புக் கிடங்கில் மழையால் நெல் மூட்டைகள் நனைந்து இழப்பு ஏற்படு வதைத் தடுப்பதற்காகத் தமிழகத்தில்
    213 இடங்களில் மேற்கூரையுடன் கூடிய நெல் சேமிப்பு தளங்கள் அமைக்கப்பட்டன. இதை இன்னும் மேம்படுத்துவது தொடர்பாக பணியாளர்களிடம் கலந்தாலோசனை செய்தோம். இதன் மூலம் பக்கவாட்டில் தார்பாய் மட்டும் போட்டால் போதும் என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர் அருகே பஞ்சநதிக ்கோட்டையில் ரூ. 1 கோடி மதிப்பில் பரிசோதனை அடிப்படையில் நெல் கொள்முதல் பெருநிலையம் அமைக்கத் திட்டமிடப் பட்டுள்ளது.

    இதில், 400 டன்கள் கொள்ளளவு கொண்ட அனைத்து பணிகளுமே தானியங்கி மூலம் செயல்படுத்தும் விதமாக முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் நெல் தூற்றுவது முதல் சாக்கு மூட்டையில் நெல்லை நிரப்பி தைப்பது வரை முழுவதும் எந்திரங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்தப் பரிசோதனை வெற்றி பெற்றால், தொடர்ந்து இத்திட்டம் அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்லப்படும்.தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட நிகழாண்டு 2.31 லட்சம் மெட்ரிக் டன்கள் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் இதுவரை 35.73 லட்சம் மெட்ரிக் டன்கள் கொள்முதல் செய்யப்பட்டு, 4.41 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 7 ஆயிரத்து 891 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

    விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங் களில் அறுவடைப்பணிகள் நடைபெறுகின்றன.தமிழகத்தில் 35 ஆயிரத்து 941 நியாய விலைக் கடைகள் நடத்தப்படுகின்றன. புதிய நியாய விலைக் கடைகளை உருவாக்குவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    கூட்டுறவுத் துறை மூலம் கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு விவசாயக் கடனாக ரூ. 13 ஆயிரத்துக்கு 442 கோடி வழங்கப்பட்டுள்ளது. நிகழாண்டு தமிழக முதல்வர் ரூ. 14 ஆயிரம் கோடி விவசாயக் கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளார்.

    நிகழாண்டு உலக சிறுதானிய ஆண்டாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே, நீலகிரி உள்பட 2 மாவட்டங்களில் கேழ்வரகு சாகுபடி தொடங்கப் படுகிறது. கேழ்வரகை நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலமாகவும், மற்ற சிறுதானிய பயிர்களைக் கூட்டுறவு மூலமாகவும் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

    நியாய விலைக் கடைகளில் விரல் ரேகை பதிவாகாமல் போகும் நிலையில், அவர்களைத் திருப்பி அனுப்பாமல், அதற்கென உள்ள படிவத்தை நிறைவு செய்து கொடுத்து, பொருட்களைச் பெற்றுச் செல்லலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் பிரபாகரன், மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×