என் மலர்tooltip icon

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட அரசுப்பள்ளிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் சரவணவேல்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழப்பழூர், விழுப்பணங்குறிச்சி, குருவாடி, ஏலாக்குறிச்சி, திருமானூர், மேலப்பழூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ள கட்டிடங்களை மேம்படுத்தியும், சுற்று சுவர் அமைக்கவும் புனரமைத்து நவீனப்படுத்திட ஏதுவாக பழைய கட்டிடங்களையும், வளாகங்களையும் கலெக்டர் சரவணவேல்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதில், விழுப்பணங்குறிச்சி மற்றும் குருவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர், சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்தி மரக்கன்றுகள் நட்டு பராமரித்திட அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

    ஏலாக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர், அங்கிருந்து மருத்துவர் மற்றும் பணியாளர்கள் கட்டிடத்தில் தரை பகுதியினை சீரமைத்து த்தரவும், நேயாளிகள் அமர இருக்கைகள் வேண்டியும் கோரிக்கை வைத்தனர். உடனடியாக தரைகளை சீரமைக்கவும், இருக்கைகள் வாங்கவும் கலெக்டர் நடவடிக்கை மேற்கொண்டார்.

    திருமானூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர், பள்ளிக் கட்டிட உட்புற மேற்கூரை சீர்கெட்டு இருப்பதை பார்வையிட்டு அதனை உடனடியாக சரி செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், சுற்றுப்புற சுவர்களை புனரமைக்க வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கவும் உத்தரவிட்டார்.

    திருமானூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆய்வுசெய்த கலெக்டர், பழைய கட்டிடங்களை அப்புறப்படுத்தி உரிய முறையில் பராமரிக்கவும், சுற்றுப்புற வளாகத்தினை தூய்மையாக வைத்திடவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    கீழப்பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த கலெக்டர் ரூ.12 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் அமைக்கவும், கருத்துரு தயாரிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரஸ்வதிகணேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட செயற்பொறியாளர் குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கங்காதாரணி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நூறு நாள் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இலைக்கடம்பூர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நூறு நாள் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இலைக்கடம்பூர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    செந்துறை அருகேயுள்ள இலைக்கடம்பூர் ஊராட்சியில் பணியாற்றி வரும் நூறு நாள் பணியாளர்களுக்கு கடந்த சில வாரங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.இது குறித்து பணியாளர்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் கூறியும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும், உடனடியாக ஊதியத்தை வங்கி மூலம் பணியாளர்களுக்கு வழங்க வேண்டும். இலைக்கடம்பூர் பகுதியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த செந்துறை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம்,காவல் ஆய்வாளர் ஜெபராஜ் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அரியலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற எஸ்.எஸ்.எல்சி தேர்ச்சி பெறாத, எஸ்.எஸ்எல்சி தேர்ச்சி பெற்ற, மேல்நிலை தேர்ச்சி, பட்டப்படிப்பு கல்வித் தகுதியை பதிவு செய்து ஐந்து வருடங்கள் முடிவடைந்து அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடர்ந்து புதுப்பித்து இருக்க வேண்டும்.

    எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்த மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஓராண்டு முடித்திருக்க வேண்டும்.

    தாழ்த்தப்பட்ட- பழங்குடியினத்தவர்கள் 30.6.2016 அன்று 45 வயதிற்குள்ளும் இதர அனைத்து வகுப்பினர் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். மனுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் கல்வி பயிலும் மாணவ மாணவியராக இருத்தல் கூடாது. ஆயினும் தொலைதூர கல்வி பயிலுபவராக இருக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் 50,000- க்கும் மிகாமல் இருக்க வேண்டும். மாற்று திறனாளிகளுக்கு வருமான வரம்பு ஏதும் இல்லை.

    பள்ளி கல்விச் சான்றிதழ்கள் மற்றும் கல்லூரி படிப்புச் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேற்கண்ட சான்றுகளுடன் மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் 31.8.2016-க்குள் முற்பகலில் வேலை நாட்களில் நேரில் புதிய விண்ணப்பப்படிவம் பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    ஜெயங்கொண்டம் அருகே மாட்டு வண்டி மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தி மாடு சம்பவ இடத்திலேயே பலியானது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுச்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் செல்லதுரை (வயது 50). இவர் சொந்தமாக மாட்டு வண்டி வைத்துள்ளார்.

    இன்று அதிகாலை செல்லத்துரை மற்றும் அவரது மகன் சரத்குமார் ஆகியோர் மாட்டு வண்டியில் விறகுகளை ஏற்றிக் கொண்டு சின்ன வளையம் கிராமத்திற்கு சென்றனர். அங்கு விறகுகளை இறக்கி விட்டு ஜெயங் கொண்டம்-சிதம்பரம் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 108 ஆம்புலன்ஸ் நிலை தடுமாறி மாட்டு வண்டியின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செல்லத்துரை மற்றும் அவரது மகன் சரத்குமார் படுகாயமடைந்தனர். மேலும் 108 ஆம்புலன்சை ஓட்டி வந்த டிரைவர் மேலநினிக்குடி கிராமத்தைச் சேர்ந்த முருகன் மற்றும் ஊழியர் வீரமணிகண்டன் ஆகியோரும் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்தில் காயமடைந்த மாடு சம்பவ இடத்திலேயே பலியானது.

    இதனிடையே 108 ஆம்புலன்சில் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்ட நோயாளி மாற்று ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமானூர் அருகே சிறப்பு சப்–இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்த வாரணவாசி பிள்ளையார் கோவில் அருகே கீழப்பழுவூர் சிறப்பு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ரங்கராஜன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது வாரணவாசியை சேர்ந்த அழகர் மகன் ராயர் (வயது 30) என்பவர் குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்தார். இதை பார்த்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். அப்போது ராயர் மோட்டார் சைக்கிளை சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ரங்கராஜன் காலில் மோதினார். இதனை தட்டி கேட்ட ரங்கராஜனை, ராயர் தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதுகுறித்து கீழப்பழுவூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ரங்கராஜன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ராயரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர் அருகே வாலிபரை மிரட்டி பணம் பறித்த இளம்பெண் உள்பட 2 மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்

    அரியலூர்:

    அரியலூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது36). இவர் அங்குள்ள பஸ் நிலையம் அருகே டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வருகிறார்.

    இதையடுத்து பாருக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக வண்ணாங்கோட்டை பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தின் அருகே சென்று கொண்டு இருந்தார்.

    அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்துள்ளனர். அவர்கள் ஜெயக் குமாரிடம் நாங்கள் பிரபல கட்சியை சேர்ந்தவர்கள் எங்களை கண்டால் அரியலூரில் உள்ள அனைவரும் பயந்து நடுங்குவார்கள் என கூறி அரிவாளை கூறி மிரட்டி உள்ளனர்.

    பின்னர் ஜெயக்குமாரிடம் இருந்த ரூ.2600யை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து அவர் அரியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் வல்லம் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி(36), வடவார் அண்ணாபுரம் பகுதியை சேர்ந்த சுதா(30) என்பவர்கள் தான் ஜெயக்குமாரை மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்.

    அரியலூர் மாவட்ட கபடிவிளையாட்டு வீரர்கள் தேர்வு வரும் 18–ம் தேதியன்று மாலை 3 மணியளவில் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலைமற்றும் அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உளளது.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்ட கபடிவிளையாட்டு வீரர்கள் தேர்வு வரும் 18–ம் தேதியன்று மாலை 3 மணியளவில் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலைமற்றும் அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உளளது. சப்–ஜூனியர் மற்றும் ஜூனியர் பிரிவுகளுக்கு தேர்வு நடைபெறவுள்ளது.

    சப்–ஜூனியருக்கான வயது வரம்பு 01.01.2001அன்று அல்லது அதற்குபிறகு பிறந்திருக்க வேண்டும். எடை 50 கிலோவிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஜூனியருக்கான வயது வரம்பு 01.01.1997க்குள் பிறந்திருக்கவேண்டும். இப்போட்டியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வீரர்கள் அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்டவராக இருக்கவேண்டும்.

    திறமையான விளையாட்டு வீரர்கள் தங்களுக்கான வயது வரம்பு சான்றிதழின் நகல் எடுத்து வரவேண்டும் என மீனாட்சி ராமசாமி கல்விகுழுமத்தின் தாளாளரும், அரியலூர் மாவட்ட அமச்சூர், கபடிக்கழகத்தின் தலைவருமான ரகுநாதன் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.1.83 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் எ.சரவணவேல்ராஜ் இன்று வழங்கினார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

    கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 275 மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்ற மாவட்ட ஆட்சியர் இம்மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார்.

    கூட்டத்தில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட பரிசளிப்புத் திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம் பரணம் (வ) ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியருக்கு ரூ.12 ஆயிரத்து 500-க்கான காசோலையினையும், அதேபோல், அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், காசாங்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையினையும் என ரூ.37 ஆயிரத்து 500 மதிப்பிலான காசோலையினை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    மேலும், புதுவாழ்வுத் திட்டத்தின் சார்பில் 39 மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளி சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் மூலம் நேரடி கடனாக ரூ.94 இலட்சத்து 32 ஆயிரம் மதிப்பில் நேரடி கடனுக்கான காசோலைகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்த்தின் மூலம் 19 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.87 இலட்சத்து 2 ஆயிரம் மதிப்பில் உதவிக்குழுக்களுக்கான காசோலைகளையும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு தலா ரூ.4500 வீதம் ரூ.45 ஆயிரம் மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களையும்,

    மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 45 பயனாளிகளுக்கு தலா ரூ.3750 வீதம் ரூ.1 இலட்சத்து 68 ஆயிரத்து 750 மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களும், 1 பயனாளிகளுக்கு ரூ.4 ஆயிரத்து 750 மதிப்பிலான இலவச சலவை பெட்டியினையும், வேளாண்மைத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு தலா ரூ.395 வீதம் ரூ.3 ஆயிரத்து 950 மதிப்பிலான வேளாண் இடுப்பொருட்களும் என ஆகமொத்தம் 126 நபர்களுக்கு ரூ.1 கோடியே 83 இலட்சத்து 93 ஆயிரத்து 950 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ் வழங்கினார்.

    கூட்டத்தில், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை சரஸ்வதி கணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) பூமி, இணை இயக்குநர் வேளாண்மை (பொ) மனோகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) செந்தில் குமரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மாரிமுத்து, துணை ஆட்சியர் (சமூகநல பாதுகாப்புத்திட்டம்) மங்கலம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், திட்ட மேலாளர் (புதுவாழ்வுத்திட்டம்) கதிர்வேல், உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) சரவணபாண்டியன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    ×