என் மலர்tooltip icon

    அரியலூர்

    மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியான சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வடுக பாளையம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் தண்டபாணி. ஜெயங்கொண்டத்திலுள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். 

    இந்த நிலையில்  ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம் போல் மேல் மாடியில் உள்ள தனது அறைக்கு சென்றுள்ளார். அங்கு உணவருந்தி விட்டு கைகளைக் கழுவுவதற்காக தண்ணீரை ஊற்றிய போது எதிர்பாராதவிதமாக கீழே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் தண்ணீர் பட்டு அதிலிருந்து தண்டபாணி மீது மின்சாரம் பாய்ந்தது. 

    இதில் சம்பவ இடத்திலேயே தண்டபாணி உயிரிழந்தார். தகலறிந்து வந்த ஜெயங்கொண்டம் போலீசார் பலியான தண்டபாணியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பேரணியில் ஈடுபட்டனர்.
    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம், செந்துறையில், மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பேரணியில் ஈடுபட்டனர்.
    தேர்தலின் போது பா.ஜ.க. அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஒடுக்கும் செயலில் ஈடுபடுவ தைக்கண்டித்தும்,  

    பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்க ளுக்கு  உரிய நிவாரணம் வழங்காததை கண்டித்தும். காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே  பெயரில்  பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்று அறிவித்த இந்த மகா  சபையினரை  கண்டித்தும் இந்த பேரணி நடைபெற்றது.

    பேரணியானது, செந்துறை பேருந்து நிலையத்தில் தொடங்கி  பிரதானகடை வீதி வழியாகச் சென்று காமராஜர் சிலை முன்பு நிறைவடைந்தது.

    பேரணிக்கு பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். செந்துறை மேற்கு வட்டாரத்  தலைவர் ராஜேந்திரன் முன்னிலை  வகித்தார்.எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாநில துணைத் தலைவர் மணிரத்தினம்  கண்டன  உரையாற்றினார். இதில் திரளான காங்கிரஸ்  கட்சியினர் கலந்து கொண்டனர்.
    டாஸ்மாக் ஊழியர் உரிய ஆவணமின்றி வங்கிக்கு எடுத்து சென்ற ரூ.5 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    அரியலூர்:

    அரியலூர், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், வரதராசன்பேட்டை ஆகிய பகுதிகளில்  நகர்ப்புற  உள்ளாட்சித்  தேர்தல் வருகிற 19 ஆம் தேதி நடைபெறு வதையொட்டி, பணப்பட்டு வாடாவை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் மேற்கண்ட பகுதிகளில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், நேற்று காலை அரியலூர் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே தேர்தல் பறக்கும் படை அலுவலர் கணேசன் தலைமையில் அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கருவேப்பில்லை கட்டளையைச் சேர்ந்த நடேசன் மகன் கலியமூர்த்தி என்பவரை மறித்து சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், அவர் சுண்டக்குடியிலுள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி  வருவதும்,     கடையில் கடந்த இரண்டு நாட்களாக வசூலான தொகை ரூ.5 லட்சத்து  3  ஆயிரத்து  450-ஐ அரியலூரிலுள்ள வங்கியில் செலுத்த வந்திருப்பது தெரியவந்தது. 

    எனினும் அதற்கான உரிய ஆதாரம் இல்லாததால் அதிகாரிகள் மேற்கண்ட தொகையினை பறிமுதல் செய்து,  அரசு  கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
    கண்டராதித்தன் செம்பியன் மாதேவி ஏரியை தூர்வார வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூரில் உள்ள ஒரு தனியார் வளாகத்தில் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில்  கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சமூக ஆர்வலர் வரதராஜன் தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் திருமானூர் ஒன்றிய அலுவலகத்திற்குஅருகில் பள்ளி குழந்தைகள் பொதுமக்களுக்கு  நடை பாதை அமைக்க வேண்டும். தமிழக நிதியமைச்சர்  பி.டி.ஆர் பழனி வேல்தியாகராஜன் அறிவுறுத்தலின்படி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்து நடவடிக்கைகளும் தமிழ் மொழியை பயன்படுத்த வேண்டும்.

    அரசு கண்டராதித்தன் செம்பியன் மாதேவி  ஏரியை ஆழப்படுத்த ரூ.10 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்க  வேண்டும். கண்டராதித்த ஏரி கரையில் இலந்தை கூடம் வரை தார்சாலை அமைக்கவேண்டும்.

     திருமானூரிலிருந்து தா.பழூர்வரை டெல்டா பகுதிகளில் நெல் அறுவடை துவங்கி விட்டதால் நடமாடும் நெல் கொள்முதல் அமைக்க வேண்டும்.

    திருமானூர் பேருந்து நிலையத்தில் நிழல் குடை அமைக்க வேண்டும், திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் நுழைவு வாயிலில் இருந்து மருத்துவமனை வரை செல்ல மின்விளக்கு மற்றும் தார் சாலை அமைத்திட வேண்டும்.

     திருமானூர் எம்.ஜி.ஆர். சிலை அருகில் மற்றும் பேருந்து நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காவல்துறையால் அமைக்கப்பட வேண்டும் போன்ற 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ராமகிருஷ்ணன், துரை, சசிகுமார், பவுல்ராஜ், மற்றும் விஜயா ஆகியோர் கலந்து கொண்டனர்.
    அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லமுத்து மகன் சிவக்குமார் (வயது25).   ரீவைண்டிங் செய்யும் கடை நடத்தி வரும் இவர், அதே பகுதியை சேர்ந்த வினோதினி என்ற பெண்ணை 2 வருடமாக காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  

    இதனால்  சம்பவ தன்று இரவு வீட்டை விட்டு வெளியேறிய இவர்கள், சமயபுரம் கோவிலுக்கு சென்று, அங்கு திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் பெற்றோர் மற்றும் உறவினர்களால் ஆபத்து ஏற்படும் என்று அஞ்சிய இவர்கள், பாதுகாப்பு அளிக்க வேண்டும் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    இதற்கிடையே தனது மகளை காணவில்லை என வினோதினியின் பெற்றோர் உடையார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தனர்.

    இந்நிலையில் மணமக்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தது தெரியவந்துள் ளதை தொடர்ந்து,  மகளிர் காவல் நிலையத்திற்கு வந்த வினோதினியின் பெற்றோர் தங்களுக்கும் தங்களது மகளுக்கும் எவ்விதமான சம்மந்தமும் இல்லை எனக்கூறி எழுதிக் கொடுத்தாக கூறப்படுகிறது.

    பின்னர் போலீசார் காதல் ஜோடிக்கு அறிவுரை கூறி இவரையும் சந்தோஷமாக வழி அனுப்பிவைத்தனர்.
    அதிக பாரம் ஏற்றிச் சென்ற லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
    அரியலூர்:
     
    அரியலூர் அருகேயுள்ள கடுகூர் கிராமத்தில், அதிக பாரம் ஏற்றிக் கொண்டு வேகமாக சென்ற லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அயன்ஆத்தூர் கிராமத்தில் அரசு சிமென்ட் ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கம் உள்ளது. இங்கிருந்து லாரிகள் மூலம் சுண்ணாம்புக்கல் ஏற்றப்பட்டு  அரியலூரிலுள்ள சிமென்ட் ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

    இந்த லாரிகள் கடுகூர் வழியாக விபத்தை ஏற்படுத்தும் வகையில், அதிக பாரத்துடன் சுண்ணாம்புக் கல் ஏற்றிக் கொண்டு அதிவேகமாக சென்றுள்ளது.

    இதை கவனித்த கிராமமக்கள், அந்த வழியாக சென்ற லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த கயர்லாபாத் காவல் துறையினர்,

    அதிக பாரம் ஏற்றிக் கொண்டு அதிக வேகமாக லாரிகளை இயக்கி வரும் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில், பொது மக்கள் லாரிகளை விடுவித்தனர்.
    சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோரியம்பட்டி நடுபட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது 25).   இவர்   17 வயது சிறுமியை காதலித்துள்ளார். இது சிறுமியின்  தாயார் விஜயலட்சுமிக்கு தெரிந்ததையடுத்து சிறுமியை கண்டித்துள்ளார்.

    ஆனால் இருவரும் காதலை தொடர்ந்துள்ளனர்.  இது குறித்து இருவீட்டாரும் பேசி இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

    இந்நிலையில் சிறுமி கர்ப்பம் அடைந்த நிலையில் பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு வந்த  போது சிறுமி குழந்தை திருமணம் செய்திருப்பது தெரியவந்தது.

     இதுகுறித்து  அரியலூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கார்த்திகேயனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட கார்த்திக்கேயன் இதுகுறித்து ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் குழந்தைதிருமணத்திற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயார் விஜயலட்சுமி,  சரவணன் தந்தை சந்திரன், தாயார்  தேவிகா ஆகியோர் மீது  போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்

    மின்சாரத்தில் சிக்கி உயிருக்கு போராடிய அரிய வகை ஆந்தை மீட்கப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மலங்கன்குடியிருப்பு கிராமத்தைச்  சேர்ந்தவர் நடராஜன். இவரது வீட்டின் முன்பு உயரழுத்த மின்சாரம் செல்கிறது.

    இதன் அருகே சுமார் 2 கிலோ எடையுள்ள அரிய வகை ஆந்தை ஒன்று, எதிர்பாராத விதமாக மின்சாரத்தில் சிக்கியது.இதில் அதன் இறக்கைகள் காயமடைந்து பறக்க முடியாமல் உயிருக்கு போராடிக்கொண்டிருந்து.
     
    அப்போது அவ்வழியே சென்ற அதே கிராமத்தைச் சேர்ந்த நடராஜன், கார்த்திகேயன் ஆகியோர் ஆந்தையை பத்திரமாக மீட்டு, வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தவனத்துறை அலுவலர் மனவாளன் ஆந்தையை மீட்டு அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை அளித்தார்.

    பின்னர் ஆந்தையை அங்குள்ள வனப்பகுதியில்விட்டனர். மின்சாரத்தில் அடிபட்டு உயிருக்குப் போராடிய ஆந்தையை  பத்திரமாக மீட்ட இளைஞர்களை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
    தேர்தல் பணிகளை கண்காணித்திட தேர்தல் பார்வையாளர்களை நியமித்துள்ளனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி  தேர்தல்  பணிகளை பார்வையிட  பூங்கொடி  நியமனம் செய்யப்பட்டதை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்திற்கு கடந்த 3-ந்தேதி வருகைபுரிந்துள்ளார்.  

    எனவே, அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் முறை கேடுகள் தொடர்பான புகார்களை தேர்தல் பார்வையாளருக்கு தெரிவிக்க 89253 55738 எனும் செல்லிட பேசியில் தொடர்பு கொள்ளலாம்.

    மேலும், 4-ந்தேதி  அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய நகராட்சிகள் மற்றும் உடையார்பாளையம், வரத ராஜன்பேட்டை ஆகிய பேரூராட்சிகளில் வேட்பு மனுத்தாக்கல் மற்றும் தேர்தல் தொடர்பான பணிகளை மாவட்ட தேர்தல் பார்வையாளர் பூங்கொடி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளை பார்வையிட சமூக நலம் மற்றும்  மகளிர் உரிமைத்துறை இயக்குநர் ரத்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    நகர்ப்புற உள்ளாட்சி  தேர்தல் நடத்தை விதி முறைகள் மீறல்  மற்றும்  புகார்கள் குறித்து தேர்தல் பார்வையாளரின் 81228 10097 என்ற அலைபேசி எண்ணிற்கு  தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
    தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் அனைவரும் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
    அரியலூர் :

    அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித்  தேர்தல்  பணியில் ஈடுபடும் அலுவலர்கள் அனைவரும்    இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திருக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் பார்வையாளர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    அரியலூர் கலெக்டர் அலுவலக  கூட்டரங்கில்  நடைபெற்ற தேர்தல் பணிகள் தொடர்பான அரசு  அலுவலர்களுடான ஆலோசனைக் கூட்டத்தில்  அவர் மேலும் பேசியதாவது:
     
    வாக்குப் பதிவு மையங்களில் குடிநீர் வசதி, மின்சார வசதி, சாய்தள மேடை வசதி, வீல்சேர், கழிவறை வசதி உள் ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக இருப்பதை உறுதி செய்யவேண்டும்.

    இதில் ஏதேனும் குறை பாடுகள் இருந்தால் அதனை உடனடியாக  சரி  செய்ய வேண்டும். தேர்தல் பயிற்சி வகுப்புகளில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தவறாமல் கலந்து கொண்டு முறையாக  பயிற்சி பெற வேண்டும். அனைவரும் தவறாமல் கோவிட் தடுப்பூசி இரண்டு தவணைகள் செலுத் தியதை உறுதி செய்திடவேண்டும்.

    தேர்தல் விதிமுறைகள் குறித்து அனைத்து வேட்பாளர்களுக்கும்   முறையாக எடுத்துரைப்பதுடன் தேர்தல் விதிமுறைகள்    முறையாக கண்காணிக்கப்பட வேண்டும் என்றார்.
    கூட்டத்துக்கு கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி  முன்னிலை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்  சு.சுந்தர்ராஜன், மகளிர்   திட்ட அலுவலர் சிவக்குமார்,  நகராட்சி ஆணையர்கள் அரியலூர் சித்ரா சோனியா, ஜெயங் கொண்டம்  சுபாஷினி  மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     
    அரியலூர், ஜெயங்கொண்டத்தில் உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
    அரியலூர்:

    அரியலூர், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், வரதராசன்பேட்டை ஆகிய பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, தேர்தல் பறக்கும் படையினர் மேற்கண்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில்,  அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு தேர்தல் பறக்கும் படை அலுவலர் கணேசன் தலைமையில், காவல் துறையைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ், அந்தோணிராஜ் ஆகியோர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக தவுத்தாய்குளத்தில் இருந்து அரியலூர் நோக்கி வந்த இருசக்கர வாகனத்தை மறித்து சோதனையிட்டனர்.

    அப்போது வானத்தினுள் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 700 இருந்தது தெரியவந்தது.  இதுகுறித்து அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் அவர், கீழகொளத்தூரை சேர்ந்த தங்கராஜ் மகன் தேவேந்திரன் என்பது தெரிந்தது.

    அவர், தவுத்தாய்குளத்திலுள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வருவதும், பங்கில் வசூலான மேற்கண்ட தொகையை அரியலூர் பாரத ஸ்டேட் வங்கியில்  செலுத்த  வந்ததும் தெரியவந்தது.

    எனினும் அவர் உரிய ஆவணங்களின்றி பணத்தை எடுத்து வந்துள்ளதால் அவரிடமிருந்து மேற்கண்ட தொகையை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    அரசு பள்ளியில் கருவேலமரம் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்காவட்டாங் குறிச்சி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப்பள்ளியில் 476 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    சமீபத்தில் பாம்புகள் பள்ளி வளாகத்தில் உள்ளே புகுந்ததால் மாணவர்கள் பயந்தனர். பின்னர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்து பாம்புகள் பிடிக்கப்பட்டது.  இது குறித்து கலெக்டர் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.

    இதைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் உள்ள கரு வேலமரங்களை அகற்றிடவும், கூடுதல் கட்டிடங்களை கட்டி தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், கோரிக்கை விடுத்திருந்த செய்தி மாலைமலர் நாளிதழில் வெளியிடப்பட்டது.

    இதைதொடர்ந்து தற்போது கருவேலமரங்கள் அகற்றும் பணி  தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை கண்ட  மாணவர்களின் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், மாலைமலர்  நாளிதழுக்கு பாராட்டுகளை தெரிவித் துள்ளனர்.
    ×