என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரியலூர் பெருமாள் கோவில்களில் வழிபாடு
- புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு அரியலூரில் உள்ள பெருமாள் கோவில்களில் வழிபாடு
- துளசி அர்ச்சனை, அலங்கார தீப வழிபாடு, மந்திர உபசார பூஜைகள் நடைபெற்றன
அரியலூர்,
புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் வழிபாடு நடைபெற்றது. புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் வளமான வாழ்வு கிட்டும் என்பது ஐதிகம். புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் வழிபாடு நடைபெற்று வருகின்றன.இதில் அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை வழிபாடு நடைபெற்றது. காலை சுப்ரபாத சேவை, விஷ்வரூப தரிசனம் ஆகியவற்றுக்குப் பின், பெருமாள், தாயார் ஸ்ரீதேவி, பூதேவி உற்சவர்களுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பெருமாள், தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. துளசி அர்ச்சனை, அலங்கார தீப வழிபாடு, மந்திர உபசார பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் அரியலூர் கோதண்டராம கோயில் மற்றும் ஜெயங்காண்டம், திருமானூர், திருமழபாடி, தா. பழூர், ஆண்டிமடம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.






