என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆண்டிமடத்தில் உள்ள விநாயகர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
- விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ஆண்டிமடத்தில் உள்ள விநாயகர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
- சிறப்பு அபிசேகமும் , விநாயகருக்கு சிறப்பு சந்தனகாப்பு அலங்காரமும் நடைபெற்றது
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் விளந்தை-ஆண்டிமடம் மேல அகத்தீஸ்வரர் கோவிலில் உள்ள ஸ்தல விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கடந்த 9 ம் தேதி முதல் தினமும் பால், தயிர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், திரவிய பொடி, சந்தனம், மஞ்சள், அரிசி மாவு, பன்னீர் போன்ற அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து 10ம் நாளான நேற்று விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பு அபிசேகமும் விநாயகருக்கு சிறப்பு சந்தனகாப்பு அலங்காரமும் நடைபெற்றது. அதன் பின்னர் உற்சவர் சன்னதியை சுற்றி வலம்வந்தார். இதில் ஆண்டிமடம், விளந்தையை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் போலீஸ் நிலையம் அருகில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. காலை கணபதி ஹோமம் அதனை தொடர்ந்து கலச அபிசேகம், மதியம் அன்னதானம், இரவு சந்தனகாப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பிரசாதம் வழங்கபட்டது. இதேபோல் ஆண்டிமடம் வெற்றிவிநாயகர், விளந்தை அழகு சுப்ரமணியர் கோவில் ஸ்தல விநாயகர், புதுபிள்ளையார் கோவில், வரசித்தி விநாயகர் கோவில் மற்றும் ஆண்டிமடத்தை சுற்றியுள்ள அனைத்து பிள்ளையார் கோவிலிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.