என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 2 பேர் கைது
- திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டனர்
- 70 பவுன் நகைகள் மீட்பு - மக்கள் பாராட்டு
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் அரியலூர், கீழப்பழுவூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கடந்த ஆறு ஆண்டுகளாக ஆளில்லாத வீடுகளில் தொடர் கொள்ளை மற்றும் தொடர் வழிப்பறி நடைபெற்று வந்தது.
அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் பேரில் கீழப்பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாயம் அன்பரசு தலைமையில் அரியலூர் இன்ஸ்பெக்டர்கள் கோபிநாத் திருமானூர் சப் இன்ஸ்பெக்டர் ராஜவேல் உள்ளிட்ட போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் கடந்த சில மாதங்களாக தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அரியலூர் பகுதியில் மோட்டர் பைக்கில் சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்களில் ஒருவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் கொளக்குடி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பதும் மற்றொருவர் சிவகாசியை சேர்ந்த முனியாண்டி ராஜா என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில் இவர்கள் கடலூர் மாவட்டத்தில் 39 திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்றும் கடலூர் மாவட்ட போலீசார் 4 முறை குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்துள்ளார்.
இவர்கள் அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த 6 ஆண்டுகளாக மாவட்டம் முழுவதும் ஆளில்லாத பல்வேறு வீடுகளின் பூட்டை உடைத்து நகை பணத்தை கொள்ளையடித்தது மற்றும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இது தொடர்பாக அரியலூர் மாவட்டத்தில் 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தொடர் விசாரணையில் அவர்களிடம் இருந்து ரூ. 28 லட்சம் மதிப்புள்ள 70 சவரன் நகைகள் கைப்பற்றப்பட்டன. பல ஆண்டுகளாக அச்சுறுத்தி வந்த திருடர்களை பிடித்த மாவட்ட போலீசாரை பொது மக்கள் பாராட்டினர்.






