search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் பஹ்ரைன் நாட்டில் தவித்த முதியவர்  29 ஆண்டுகளுக்கு பின்னர் மீட்பு
    X

    பச்சமுத்து தனது மனைவி நல்லம்மாள் மற்றும் மகன் மணிவேல் ஆகியோருடன் உள்ளதை படத்தில் காணலாம்.

    சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் பஹ்ரைன் நாட்டில் தவித்த முதியவர் 29 ஆண்டுகளுக்கு பின்னர் மீட்பு

    • சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் பஹ்ரைன் நாட்டில் தவித்த முதியவர் 29 ஆண்டுகளுக்கு பின்னர் மீட்கப்பட்டார்.
    • இந்திய தூதரகத்தை மணிவேல் தொடர்பு கொண்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கருந்தலாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சமுத்து (வயது 59), அவரது மனைவி நல்லம்மாள். இவர்களது மகள் சுந்தராம்பாள், மகன் மணிவேல் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் பச்சமுத்து 1991ஆம் ஆண்டு குடும்ப சூழ்நிலை காரணமாக பஹ்ரைன் நாட்டிற்கு வேலைக்கு சென்றார். விடுமுறைக்கு ஊருக்கு திரும்பி அவர் 1993 ஆம் ஆண்டு மீண்டும் பஹ்ரைன் நாட்டிற்க்கு சென்றார். அவ்வாறு பஹ்ரைன் சென்ற பச்சமுத்து கடந்த 1996 ஆம் ஆண்டு வரை தனது குடும்பத்தினருக்கு கடிதம் எழுதி நலம் விசாரித்து வந்தார். அதன் பிறகு அவரிடம் இருந்து குடும்பத்தினருக்கு கடிதம் அனுப்பவில்லை. மேலும் அவரிடம் இருந்து கடிதம் வரும், வரும் என எதிர்பார்த்த குடும்பத்தினருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. ஆனாலும் தமிழகத்திலிருந்து பஹ்ரைன் நாட்டிற்குச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் உறவினர்களிடம் அவ்வப்போது நல்லம்மாள் தனது கணவரை பார்த்தீர்களா? என விசாரித்து புலம்பி வந்துள்ளார். இந்நிலையில் கூலி வேலை செய்து மிகவும் கஷ்டப்பட்டு வந்த நல்லம்மாள் தனது மகள் சுந்தராம்பாள் மற்றும் மகன் மணிவேல் ஆகியோர்களுக்கு திருமணம் செய்து வைத்தார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த உறவினர் ஒருவர் மூலம் கடந்த ஜனவரி மாதம் பச்சமுத்து என்பவர் பஹ்ரைன் நாட்டில் உள்ளதாக அவரது மகன் மணிவேலுக்கு தகவல் கிடைத்தது.

    இதையொட்டி மணிவேல் குடும்பத்தினர் தனது தந்தை பச்சைமுத்துவிடம் தொலைபேசி யில் வாட்ஸ் அப் மூலம் பேசினர். அப்போது பச்சமுத்து பஹ்ரைன் நாட்டில் வேலை இல்லாமல் சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டு வருவதாகவும், தான் குடும்பத்துடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து மணிவேல் தனது தந்தையை ஊருக்கு அழைத்து வர முடிவு செய்தார். அதன்படி பார்வையாளராக பஹ்ரைன் நாட்டுக்குச் சென்று அங்கிருந்து தந்தையை அழைத்து வர முயற்சி செய்தார். ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக விசா கிடைக்கவில்லை. தொடர்ந்து பஹ்ரைன் நாட்டில் டிரைவராக வேலை பார்த்து வரும் தனது கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் மகன் நாகராஜ் என்பவரை மணிவேல் தொடர்பு கொண்டு விசாரித்தார். அப்போது அவர் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளார். அதன்படி இந்திய தூதரகத்தை மணிவேல் தொடர்பு கொண்டார். மேலும் பாஸ்போர்ட் அலுவலகம் மூலமாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு பச்சமுத்து குறித்த உண்மை தன்மையை விசாரணை செய்து அறிக்கையாக மாவட்ட காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து பக்ரைன் நாட்டில் உள்ள அன்னைத் தமிழ் மன்ற தலைவர் செந்தில்குமார், உலக வெளிநாட்டுவாழ் கூட்டமைப்பின் தலைவர் சுதீர், இந்திய தூதரகத்தின் தூதுவர் பியூஷ் ஸ்ரீவத்ஸவா ஆகியோரின் உதவியுடன் பச்சமுத்து தமிழகம் வந்தார். பச்சமுத்துவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அன்னை தமிழ் மன்றத்தின் செயலாளர் தாமரைக்கண்ணன் என்பவர் பச்சமுத்துவுடன் சென்னை விமான நிலையம் வரை வந்து அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார். அதன் பிறகு அவரது மகன் மணிவேல் தனது தந்தையை காரில் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றார். சொந்த ஊருக்கு சென்ற பச்சமுத்துவை அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

    Next Story
    ×