என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூர் பகுதியில் பா.ம.க.சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
- மாவட்ட வருவாய் அலுவலர் ( நில எடுப்பு பிரிவு) அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- அதிகாரிகளிடம் பா.ம.க.நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஓசூர்,
பெங்களூருக்கு செல்லும் வாகன போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தமிழக எல்லையிலிருந்து புதிதாக வெளி வட்ட சாலை அமைக்கப்படுகிறது.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேள கொண்டபள்ளி முதல் கர்நாடக எல்லை வரை 35.76 கி.மீ. தொலைவிற்கு சாட்டிலைட் டவுன் ரிங் ரோடு ( எஸ்.டி.ஆர்.ஆர்.) என்ற புதிய சாலை அமைக்கப்படுகிறது.
இதற்காக ஓசூர் பகுதியில் 340 ஹெக்டர் நிலம் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால் விவசாயிகளுக்கு இதுவரை உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை.
இதனை உடனடியாக வழங்க வலியுறுத்தி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ம.க.. மற்றும் உழவர் பேரியக்கம் சார்பில், ஓசூரில் உள்ள தனி மாவட்ட வருவாய் அலுவலர் ( நில எடுப்பு பிரிவு) அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, பா.ம.க. மாவட்ட செயலாளர் அருண் ராஜன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், அமைப்பு செயலாளர் விசுவநாதன் மற்றும் நிர்வாகிகள், விவசாயிகள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. தவறும் பட்சத்தில், டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தலைமையில் ஓசூரில் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டது.
முன்னதாக நேற்று காலை முதல், அலுவலகத்தை முற்றுகையிட்டு, உடனடியாக இழப்பீடு வாங்க வலியுறுத்தியும், கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் தென்னை மரங்களுக்குரிய உரிமைத்தொகையை குறிப்பிட்டு வழங்கப்படும் அவார்டு பிரதியை உடனே வழங்க வலியுறுத்தியும், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) முத்துமாரி மற்றும் அதிகாரிகளிடம் பா.ம.க.நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மாலை வரை இந்த நிலை நீடித்தது. பின்னர் 10 பேருக்கு அவார்டு பிரதி வழங்கியும், மற்ற விவசாயிகளுக்கு இன்னும் 2 நாட்களுக்குள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து மாலை 5 மணி அளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.






