search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. பிரமுகர் கொலையில் பிளஸ்-2 மாணவன் உள்பட 5 பேர் கைது
    X

    இளங்கோ

    அ.தி.மு.க. பிரமுகர் கொலையில் பிளஸ்-2 மாணவன் உள்பட 5 பேர் கைது

    • இளங்கோவனுக்கு எதிரிகள் யார்- யார்? என்பது பற்றிய விசாரணையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.
    • சஞ்சய் உள்பட 5 பேரையும் கொலை நடந்த 2 மணி நேரத்தில் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    சென்னை:

    சென்னை பெரம்பூர் பகுதி அ.தி.மு.க. செயலாளராக இருந்து வந்தவர் இளங்கோ.

    வியாசர்பாடி கக்கன்ஜி காலனி ராணி மெய்யம்மை தெருவில் வசித்து வந்தார். அ.தி.மு.க.வில் தீவிரமாக செயல்பட்டு வந்த இவரை வியாசை இளங்கோ என்று கட்சியினரும் அப்பகுதியை சேர்ந்தவர்களும் அழைத்து வந்தனர்.

    நேற்று இரவு 10.30 மணி அளவில் அங்குள்ள முத்து மாரியம்மன் கோவில் தெரு அருகே இளங்கோ நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை ஒரு கும்பல் சுற்றி வளைத்தது. அவர்களது கையில் பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த இளங்கோ அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அதற்குள் 5 பேர் கொண்ட கும்பல் இளங்கோவை நாலாபுறமும் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது.

    இதில் உடலில் பல இடங்களில் பலத்த வெட்டு காயங்கள் விழுந்தன. இதை தொடர்ந்து அலறி துடித்த இளங்கோ ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். இதன் பிறகு கொலை கும்பல் அவரை மீண்டும் மீண்டும் சரமாரியாக ஆயுதங்களால் வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே இளங்கோ துடிதுடித்து பலியானார். அவரை வெட்டிக்கொன்ற கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானது.

    இதையடுத்து அக்கம்பக்கத்தினர் கொலை நடந்த பகுதியில் திரண்டனர். அ.தி.மு.க. பிரமுகர்களும் விரைந்து வந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் செம்பியம் போலீசார் உடனடியாக நேரில் சென்று விசாரணையை முடுக்கிவிட்டனர்.

    கொலையாளிகள் யார்? என்பது பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் 5 பேர் ஒன்று சேர்ந்தே இளங்கோவை தீர்த்து கட்டியதும் அவர்கள் வயது 17 வயதில் இருந்து முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.

    இதை தொடர்ந்து இளங்கோவனுக்கு எதிரிகள் யார்- யார்? என்பது பற்றிய விசாரணையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

    இதற்கிடையே அ.தி.மு.க.வினரும் திரண்டு கொலையாளிகளை உடனடியாக பிடிக்க போலீசிடம் வற்புறுத்தினார்கள்.

    போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் வடசென்னை கூடுதல் கமிஷனர் அன்பு, இணை ஆணையர் ரம்யா பாரதி, துணை கமிஷனர் ஈஸ்வரன் ஆகியோரது மேற்பார்வையில் கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    செம்பியம் உதவி கமிஷனர் செம்பேடுபாபு, இன்ஸ்பெக்டர் அய்யப்பன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் கொலையாளிகள் யார்? என்பது தொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபரான சஞ்சய் என்பவர் தலைமையில் அவரது நண்பர்கள் ஒன்று சேர்ந்து இளங்கோவை திட்டம் போட்டு தீர்த்து கட்டியிருக்கும் திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.

    சஞ்சயுடன் சேர்ந்து வெங்கடேசன், அருண் குமார், கணேசன் மற்றும் ஒரு வாலிபர், 17 வயது சிறுவன் ஆகியோர் இளங்கோவை துடிக்க துடிக்க கொலை செய்திருப்பது அம்பலமானது.

    இவர்களில் 17 வயது சிறுவன் பிளஸ்-2 படித்து வருவதும், சஞ்சய்யின் நண்பரான இவன் 'கூடா நட்பு கேடாய் முடியும்' என்பதற்கிணங்க கொலையாளியாக மாறி இருப்பதும் வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.

    இதையடுத்து சஞ்சய் உள்பட 5 பேரையும் கொலை நடந்த 2 மணி நேரத்தில் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    அ.தி.மு.க. பிரமுகர் இளங்கோவை கொலை செய்தது ஏன்? என்பது பற்றி சஞ்சய் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளான். அது பற்றிய விவரம் வருமாறு:-

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் நடந்த கோவில் திருவிழாவில் பாட்டு கச்சேரி நடந்தபோது நானும் எனது நண்பர்களும் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தோம்.

    அப்போது இளங்கோ எங்களை தாக்கிவிட்டார். அவரிடம் அடிவாங்கியபோது நான் சிறுவனாக இருந்தேன். அதனால் என்னால் எதிர்த்து நிற்க முடியவில்லை. இதன் பின்னர் எங்கள் பகுதியை சேர்ந்த பலர் என்னை பார்த்து இளங்கோவிடம் அடிவாங்கியவன் என்று அடிக்கடி கூறி வந்தனர். இதனால் இளங்கோ மீது எனக்கு கடுமையான வெறுப்பு ஏற்பட்டது.

    இளங்கோவை ஏதாவது செய்ய வேண்டும் என்கிற வெறி எனக்குள் ஏற்பட்டது. இது தொடர்பாக எனது நண்பர்களிடம் தெரிவித்தேன். தாக்கியதற்கு பதிலடியாக நாமும் தாக்கினால் மீண்டும் மீண்டும் பிரச்சினை ஏற்படும் என்று எண்ணினோம்.

    எனவே அடித்ததற்காக பழி வாங்க திட்டமிட்டோம். இதற்காக திட்டம் போட்டு காத்து இருந்தோம். கடந்த சில நாட்களாகவே இளங்கோவின் நடவடிக்கைகளை கண்காணித்தோம். அவர் தனியாக செல்லும்போது போட்டுத் தள்ளிவிட வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான நேரம் பார்த்து காத்திருந்தோம். இதையடுத்து நேற்று முழுவதும் இளங்கோவை பின்தொடர்ந்து இரவில் அவர் தனியாக நடந்து சென்றபோது சுற்றி வளைத்து தீர்த்து கட்டினோம்.

    இவ்வாறு சஞ்சய் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    இளங்கோவின் உடல் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இதன் பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். கொலை சம்பவத்தை தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு வியாசர்பாடி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×