search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வைகை அணையில் கூடுதல் நீர் திறப்பு ஆக்கிரமிப்பு வயல்களை சூழ்ந்த தண்ணீர்
    X

    வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளை படத்தில் காணலாம்.

    வைகை அணையில் கூடுதல் நீர் திறப்பு ஆக்கிரமிப்பு வயல்களை சூழ்ந்த தண்ணீர்

    • மேற்குதொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டியுள்ளதால் ஆக்கிரமிப்பு வயல்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    ஆண்டிப்பட்டி:

    மேற்குதொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மூலவைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் வைகையின் துணை ஆறுகளான பாம்பாறு, சுருளியாறு, கொட்டக்குடி, வரட்டாறு, வராகநதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    தொடர்மழை காரணமாக வைகைஅணை முழுகொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் தண்ணீர் கூடுதலாக திறக்கப்படுகிறது. இதனால் அணைப்பகுதி கடல்போல் காட்சியளிக்கிறது. நீர்தேக்க பகுதிகளை ஒட்டி வடவீரநாயக்கன்பட்டி, சொக்கதேவன்பட்டி, பின்னத்தேவன்பட்டி, வீரசின்னம்மாள்புரம், மதுராபுரி, அழகாபுரி, அம்மாபுரம், சக்கரைப்பட்டி, சாவடிபட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

    கடைசி பகுதிகள் பெரும்பாலும் வறண்டே காணப்படும். எனவே இதனைபயன்படுத்தி சிலர் இடத்தை ஆக்கிரமித்து வெண்டைக்காய், தக்காளி, பச்சைமிளகாய் உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். அணையின் நீர்மட்டம் 68 அடிக்குமேல் உயரும்போதுதான் இப்பகுதியில் நீர்தேங்கும். எனவே சிலர் வாழை, தென்னை உள்ளிட்டவற்றையும் சாகுபடி செய்து வருகின்றனர்.

    தற்போது அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் அரப்படிதேவன்பட்டி, குன்னூர், காமக்காபட்டி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வயல்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதுபோன்ற நிலையை தவிர்க்க பொதுப்பணித்துறையினர் நீர்தேக்க பகுதி எல்லைகளை அளவீடு செய்து எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆக்கிரமிக்கப்பட்ட வயல்களில் சேதம் ஏற்பட்டுள்ளதால் அரசின் இழப்பீட்டை பெறமுடியாது என வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×