search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடுகள் அகற்றப்படும் நடவடிக்கையை கைவிட வேண்டும்; முதல்-அமைச்சருக்கு எம்.எல்.ஏ. மனு
    X

    மாரிமுத்து எம்.எல்.ஏ.

    வீடுகள் அகற்றப்படும் நடவடிக்கையை கைவிட வேண்டும்; முதல்-அமைச்சருக்கு எம்.எல்.ஏ. மனு

    • ஏரி இருப்பதாக கூறி குடியிருப்புகளை அகற்றும் நடவடிக்கையில் தீவிரம் காட்டுகிறார்கள்.
    • முடிவெடுக்கும் வகையில் அதிகாரம் கொண்ட மாவட்ட அளவிலான உயர்மட்டக் குழு அமைக்க வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொருக்கை மற்றும் முத்துப்பேட்டை ஒன்றியம் ஆலங்காடு ஊராட்சிகளில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வீடுகள் அகற்றப்படும் நடவடிக்கையை தடுத்து நிறுத்தக் கோருதல் தொடர்பாக மாரிமுத்து எம்.எல்.ஏ, முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பினார்.

    அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது,

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றியம், கொருக்கை ஊராட்சி, தலைக்காடு, கண்ணன் மேடு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர்.

    இந்தக் குடும்பங்கள் குடியிருந்து வரும் நிலத்தில் ஏரி இருந்ததாகவும், மக்கள் நீர் நிலைப்பகுதிக்கான இடத்தை ஆக்கிரமித்து, குடியிருப்பதாகவும் கூறி வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை உதவியுடன் வழிவழியாக வாழ்ந்து வரும் குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

    இதற்கு நீதிமன்ற உத்தரவை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

    கொருக்கை ஊராட்சியில் ஏரி இருந்ததற்கான எந்த தடயங்களும், அடையாளங்களும் இல்லாத நிலையில், அரசு ஆவணத்தில் 37 ஏக்கர் பரப்பளவில் ஏரி இருப்பதாக கூறி குடியிருப்புகளை அகற்றும் நடவடிக்கையில் தீவிரம் காட்டுகிறார்கள்.

    புயல், பெருமழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் எதிலும் தலைக்காடு, கண்ணன் மேடு பகுதியில் உள்ள குடும்பங்கள் எவ்வித பாதிப்புக்கும் ஆளாகவில்லை.

    இயற்கை சீற்றங்களால் பதிக்கப்படாத, நீர் தேக்கம் எதுவும் இல்லாத தலைக்காடு, கண்ணன் மேடு நிலப்பகுதியை வகை மாற்றம் செய்து, குடியிருந்து வரும் குடும்பங்களுக்கு மனைப்பட்டா வழங்குவதாக மாவட்ட கலெக்டர் உறுதி அளித்துள்ளார்.

    இதேபோல் முத்துப்பேட்டை ஒன்றியம், ஆலங்காடு ஊராட்சி, இ சி ஆர் சாலை, மெயின்ரோடு பகுதியில் 80 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நீண்டகாலமாக வசித்து வருகின்றனர்.

    இந்த நிலப்பகுதியும் நீர்நிலைப் பகுதி என குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கையில் வருவாய்த்துறை தீவிரம் காட்டுகிறது.

    கொருக்கை மற்றும் ஆலங்காடு ஊராட்சிகளில் உள்ள நிலப்பகுதி போல் திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    அரசின் நடவடிக்கை மாவட்டம் முழுவதும் கடுமையான பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

    இதில் முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அரசு ஆவணங்களில் நீர்நிலைப் பகுதி அல்லது ஆட்சேபகரமான நிலப்பகுதி என வகைப்பாட்டில் உள்ள நிலப்பகுதியின் நடப்புக்காலத் தன்மையை புலத்தணிக்கை செய்து, குடியிருந்து வரும் குடும்பங்களுக்கு மனைப்பட்டா வழங்குவது அல்லது மாற்று இடத்தில் வீடுகள் கட்டிக்கொடுத்து. மறுவாழ்வை உறுதி செய்து வெளியேற்றுவது என்று முடிவெடுக்கும் வகையில் அதிகாரம் கொண்ட மாவட்ட அளவிலான உயர்மட்டக் குழு அமைக்க வேண்டும்.

    மாவட்ட அளவில் அமைக்கப்படும் உயர்மட்டக் குழுக்கள் ஆய்வு செய்யும் காலத்தை நிர்ணயித்து, இதற்கு தகுந்தபடி, அரசின் வருவாய்த்துறை உயர்நீதி மன்றத்தில் மனு செய்து, ஆக்கிரமிப்புகள் மீது சுமூகமான முறையில் தீர்வுகாண அனுமதி பெற வேண்டும்.

    மேற்கண்ட நடவடிக்கைகளுக்கான காலத்தில் தற்போது உள்ள நிலை நீடிக்க அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×