search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் 2-வது நாளாக ஆவின் பால் வினியோகம் பாதிப்பு
    X

    சென்னையில் 2-வது நாளாக ஆவின் பால் வினியோகம் பாதிப்பு

    • பெரும்பாலும் ஆவின் பால் தான் வீடுகளில் மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள்.
    • சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் இருந்து தினமும் 5.50 லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆவின் பால் நிறுவனம் மூலம் 14.50 லட்சம் லிட்டர் பால் தினமும் வினியோகிக்கப்படுகிறது. தனியார் பாலை விட ஆவின் பால் விலை குறைவாக இருப்பதால் கடைகளில் விரைவாக விற்று வருகின்றன.

    பெரும்பாலும் ஆவின் பால் தான் வீடுகளில் மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆவின் பாலை விரும்புவதால் தட்டுப்பாடாகவே இருந்து வருகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆவின் பால் விலை உயர்த்தப்பட்ட போதிலும் தனியார் பாலை விட விலை குறைவாக இருப்பதால் தொடர்ந்து தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆவின் பச்சை நிற பாக்கெட் பால் கடைகளில் உடனே விற்று தீர்ந்து விடுகின்றன.

    இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பால் வினியோகம் செய்யக்கூடிய சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் கடந்த சில நாட்களாக பால் சப்ளை செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    அங்கு பணியாற்றும் வடமாநில ஒப்பந்த தொழிலாளர்கள் ஹோலி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு சென்றவர்கள் திரும்பாததால் பால் வினியோகத்தில் தாமதம் ஏற்பட்டது.

    சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் இருந்து தினமும் 5.50 லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்யப்படுகிறது. பால் அட்டைதாரர்களுக்கு 2 லட்சம் லிட்டரும், வினியோகஸ்தர்களுக்கு 3.50 லட்சம் லிட்டரும் வினியோகிக்கப்படுகிறது.

    தொழிலாளர்கள் பணிக்கு வராததால் ஆவின் பால் லாரி, வேன்களில் ஏற்றி அனுப்புவதில் நேற்று தாமதம் ஏற்பட்டது. அதிகாலை 3, 4 மணிக்கு புறப்பட்டு செல்லக்கூடிய வாகனங்கள் காலை 6, 7 மணிக்கு மேல் புறப்பட்டதால் பால் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

    இதனால் பால் வினியோகஸ்தர்கள், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    அடையாறு, மயிலாப்பூர், வேளச்சேரி, தாம்பரம், கோவிலம்பாக்கம், பாலவாக்கம், பல்லாவரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பால் 2 மணிநேரம் தாமதமாக வினியோகிக்கப்பட்டது. இன்று 2-வது நாளாக பால் சப்ளை செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

    பால் அட்டைதாரர்களுக்கு அதிகாலையில் குறிப்பிட்ட நேரத்திற்கு பால் வினியோகிக்கப்பட்டாலும் கடைகளுக்கு வழங்கக்கூடிய வினியோகஸ்தர்களுக்கு செல்வதில் பிரச்சினை ஏற்பட்டது.

    மளிகை கடைகள், பெட்டிக்கடைகள், ஆவின் முகவர்களுக்கு குறித்த நேரத்திற்கு பால் போகாததால் பொதுமக்கள் தனியார் பால் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இதேபோல அம்பத்தூர் பால் பண்ணையிலும் தொழிலாளர்கள் பிரச்சினை ஏற்பட்டதால் மத்திய சென்னை பகுதியில் பால் வினியோகம் தாமதம் ஆனதாக தெரிகிறது. தெற்கு மற்றும் மத்திய சென்னை பகுதியில் ஆவின் பால் சப்ளையில் இன்று பாதிப்பு ஏற்பட்டதை சரிசெய்யும் வகையில் அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து ஆவின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சோழிங்கநல்லூர் பண்ணையில் தொழிலாளர்கள் நேற்று முன்தினம் குறைந்த அளவில் பணியில் ஈடுபட்டதால் நேற்று சப்ளை சற்று தாமதம் ஆனது. அவற்றை இன்று சரி செய்து விட்டோம். அங்கு பணி செய்யக்கூடிய 65 தொழிலாளர்களில் 60 பேர் வேலை செய்தனர். பால் அட்டைதாரர்களுக்கு அதிகாலை 2 மணிக்கு லாரிகள் புறப்பட்டு சென்றன. வினியோகஸ்தர்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் காலை 5.30 மணி, 6 மணி வரை சென்றன. இதனால் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை. பால் பற்றாக்குறை எதுவும் இல்லை. தேவையான அளவு சப்ளை செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×