என் மலர்
உள்ளூர் செய்திகள்

தற்கொலை செய்துகொண்ட சிவகுமார்-கிருஷ்ணவேணி.
கடன் தொல்லையால் மனைவியுடன் தொழிலதிபர் தற்கொலை: கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கில் தொங்கினர்
- கடன் தொல்லை அதிகரித்து சிவக்குமார் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
- தூக்கில் பிணமாக தொங்குவதை ஜன்னல் வழியாக பார்த்து விட்டு அதிர்ச்சியடைந்தனர்.
சூளகிரி,
தூத்துக்குடி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் சிவக்குமார் (வயது50). இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது45). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
சிவக்குமார் கடந்த 15 வருடங்களுக்கு முன்பே சூளகிரி மில்லத்நகர் பகுதிக்கு வந்து குடியேறி ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் மளிகை கடை நடத்தி வந்தார்.
கொஞ்சம், கொஞ்சமாக மளிகை கடை தொழிலில் முன்னேற்றம் அடைந்த சிவக்குமார் பின்னர் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டார்.
இதற்காக சிவக்குமார் பலரிடமும் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் கடன் தொல்லை அதிகரித்து சிவக்குமார் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனால் அவர் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வாரத்தில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்ட நிலையில் தனது மகள்கள் இருவரையும் கோயம்புத்தூரில் உள்ள தனது மாமியார் வீட்டில் கொண்டு சென்று விட்டு வந்துள்ளார்.
இன்று காலை அவரது மளிகைக்கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் கடை சாவியை வாங்குவதற்காக சிவக்குமாரின் வீட்டுக்கு சென்றனர். அப்போது சிவக்குமாரும், அவரது மனைவி கிருஷ்ணவேணியும் தூக்கில் பிணமாக தொங்குவதை ஜன்னல் வழியாக பார்த்து விட்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் சிவக்குமாரின் வீட்டில் அவர்கள் சோதனையிட்டபோது சிவக்குமார் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று கிடைத்தது. அதில் கடன் நெருக்கடி காரணமாகவே தாங்கள் தற்கொலை செய்துகொண்டதாக குறிப்பிட்டுள்ளனர் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
மேலும் கடன் தொல்லையால் தாங்கள் பாதிக்கப்பட்டது குறித்து உருக்கமுடன் பல்வேறு தகவல்களை அதில் எழுதியுள்ளதாகவும் தெரிகிறது. இந்த கடிதத்தை அடிப்படையாக வைத்து போலீசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
2 குழந்தைகளை விட்டுவிட்டு மனைவியுடன் தொழிலதிபர் மேற்கொண்ட துயர முடிவு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






