search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு: ஈரோடு இடைத்தேர்தலில் 83 வேட்புமனுக்கள் ஏற்பு
    X

    வேட்பாளர்களின் மனுக்களை தேர்தல் அலுவலர் சிவக்குமார் ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

    மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு: ஈரோடு இடைத்தேர்தலில் 83 வேட்புமனுக்கள் ஏற்பு

    • ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 27-ந்தேதி நடக்கிறது.
    • மொத்தம் 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

    ஈரோடு :

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 27-ந் தேதி நடக்கிறது. இதில் போட்டியிட ஜனவரி 31-ந் தேதி முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டன. 7-ந் தேதி வேட்புமனுக்கள் வழங்க இறுதி நாளாகும். அன்றைய தினம் மாலை 7 மணியை கடந்தும் வேட்புமனுக்கள் பெறப்பட்டன. கடைசி நாளில் இறுதி நேரத்தில் (பிற்பகல் 3 மணிக்கு) 26 பேர் வேட்புமனுக்களுடன் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்பட 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மாற்று வேட்பாளர் மனு, கூடுதல் மனு என்று மொத்தம் 121 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.

    இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடந்தது. இடைத்தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் முன்னிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாநகராட்சி ஆணையாளருமான சிவக்குமார் தலைமையில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முத்துக்கிருஷ்ணன், மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் வேட்புமனுக்களை ஆய்வு செய்தனர்.

    இந்த நிகழ்வில் வேட்பாளர்கள் சிலரும், வேட்பாளர்களின் முகவர்கள் சிலரும் கலந்து கொண்டனர். அவர்களின் முன்னிலையில் சந்தேகங்கள் தீர்க்கப்பட்டு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. அதில் படிவம் முறையாக நிரப்பப்படாதவை, உரிய கையொப்பங்கள் இல்லாதவை, முன்மொழிவுகள் இல்லாதவை என்று பல மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

    அரசியல் கட்சியின் அங்கீகார வேட்பாளரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் மாற்று வேட்பாளர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்படி மொத்தம் 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 83 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

    இதன் மூலம் தற்போதைய நிலவரப்படி 83 பேர் போட்டியில் உள்ளனர். இதில் அ.ம.மு.க. வேட்பாளர் தனது மனுவை வாபஸ் பெறுவார் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் அவர் வாபஸ் பெறுவது உறுதியாகி இருக்கிறது.

    இதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி சிவக்குமார் கூறியதாவது:-

    இடைத்தேர்தலுக்காக 121 வேட்புமனுக்கள் பெறப்பட்டு இருந்தன. இதில் 80 மனுக்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. 3 மனுக்களில் தேர்தல் பதிவு அதிகாரியின் கடிதம் நகல் வைக்கப்பட்டு இருந்தது. எனவே அந்த மனுக்கள் பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. பின்னர் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று, அந்த மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதன் மூலம் 83 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

    தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்கள் 10-ந் தேதி (நாளை) பிற்பகல் 3 மணி வரை தங்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். வேட்புமனு திரும்ப பெறுவதற்காக காலக்கெடு முடிந்ததும், சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள வேட்பாளர் மற்றும் சின்னம் வைக்கும் பகுதியில் 16 பெயர்கள் மட்டுமே வைக்க முடியும். ஆனால் இந்த தேர்தலில் 80-க்கும் மேற்பட்டவர்கள் போட்டியில் உள்ளனர். இதில் ஒரு சிலர் வாபஸ் வாங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியே சிலர் தங்கள் மனுவை திரும்ப பெற்றாலும் 3 அல்லது 4 வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இது தேர்தல் அதிகாரிகளுக்கு கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்தி உள்ளது. 80 பேருக்கு மேல் போட்டியில் இருப்பார்களா?, பாதிக்கும் மேற்பட்டவர்கள் வாபஸ் பெறுவார்களா? என்பது நாளை தெரியும்.

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. (ஓ.பன்னீர்செல்வம் அணி) சார்பில் செந்தில்முருகன் என்பவர் கடந்த 3-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்கிடையே அரசியல் களத்தில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்கள் காரணமாக தங்கள் வேட்பாளர் போட்டியில் இருந்து விலகுவதாக ஓ.பன்னீர்செல்வம் அணி முக்கிய நிர்வாகிகள் அறிவித்தனர். அவர் தனது மனுவை இன்று (வியாழக்கிழமை) வாபஸ் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று வேட்புமனு பரிசீலனையின்போது, வேட்பாளர் செந்தில்முருகனின் படிவம் உரிய முறையில் நிரப்பப்படாததால் நிராகரிக்கப்பட்டது. அவர் 2 மனுக்கள் தாக்கல் செய்து இருந்தார். 2 மனுக்களும் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    வாபஸ் பெறும் நிலை வரும் என்று எதிர்பார்த்தே, வேட்பாளர் தனது மனுவை தாக்கல் செய்தாரா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.

    Next Story
    ×