search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    8 மாத குழந்தை நீரிழிவு நோயால் உயிரிழப்பு
    X

    8 மாத குழந்தை நீரிழிவு நோயால் உயிரிழப்பு

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை மரியா ஆரோனிக்காவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
    • தனி மருத்துவ குழுவினர் மரியா ஆரோனிக்காவுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை வெளிப்பாளையத்தை சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மனைவி கார்த்திகா. இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ரூபி என்ற குழந்தை உள்ளது. 8 மாதத்தில் மரியா ஆரோனிக்கா என்ற குழந்தை இருந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை மரியா ஆரோனிக்காவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மரியா ஆரோனிக்காவை அவளது பெற்றோர் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு மரியா ஆரோனிக்காவை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அதில் மரியா ஆரோனிக்காவுக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரிய வந்தது. இதைக்கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனைத்தொடர்ந்து தனி மருத்துவ குழுவினர் மரியா ஆரோனிக்காவுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை குழந்தை மரியா ஆரோனிக்கா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதைகேட்டு பெற்றோர் கதறி அழுதனர்.

    இதுகுறித்து நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் கூறுகையில், மூச்சுத்திணறல் காரணமாக குழந்தை மரியா ஆரோனிக்காவை பெற்றோர் சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர். குழந்தையை பரிசோதனை செய்ததில் டைப்-1 வகை நீரிழிவு நோய் இருப்பது தெரிய வந்தது. குழந்தைக்கு சர்க்கரை அளவானது 520 இருந்துள்ளது. இதுமாதிரியான நோய் 4 லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு வர வாய்ப்புள்ளது. அப்படி இந்த நோய் வரும் பட்சத்தில் 6 மாதத்தில் இருந்து 1 ஆண்டுக்குள் தான் தெரியவரும். 6 மாதத்துக்கு பிறகு தாய்பாலை தவிர வேறு உணவு குழந்தைக்கு உட்கொள்ள கொடுக்கும்போது இதுமாதிரியான சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

    சம்பவத்தன்று மரியா ஆரோனிக்காவுக்கு சர்க்கரை அளவு அதிகரித்ததால், மூளை செயலிழந்து விட்டது. நோயின் தன்மை தீவிரமடைந்ததால், சிகிச்சை அளித்தும் பலனளிக்கவில்லை. எனவே ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தவறாமல் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும். பச்சிளம் குழந்தைகளின் உடலில் மாற்றம் ஏற்பட்டால் பெற்றோர் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்.

    Next Story
    ×