என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    1200 அடி உயர மலையில்  வனப்பகுதியில் 550 கஞ்சா செடிகள் கண்டுபிடிப்பு
    X

    1200 அடி உயர மலையில் வனப்பகுதியில் 550 கஞ்சா செடிகள் கண்டுபிடிப்பு

    • கஞ்சா செடிகளை வேரோடு பிடுங்கி போலீசார் அழித்தனர்.
    • வீட்டின் பின்புறம் சோதனை செய்த போது அவர் 3½ அடிக்கு கஞ்சா செடி வளர்த்து இருந்தது தெரியவந்தது

    கோவை

    கேரள மாநிலம் அட்டப்பாடியில் புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட அரளிகோணம் என்ற இடத்தில் 1200 அடி உயரத்தில் மலைப்பகுதி உள்ளது. அந்த வனத்தில் ரகசியமாக ஆங்காங்கே கஞ்சா செடிகள் பயிர் செய்து வளர்த்து வருவதாக கேரள போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து கேரள போலீசார், வனத்துறை மற்றும் போதை தடுப்பு பிரிவினர் இணைந்து மலை முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது ஆங்காங்கே பயிர் செய்திருந்த கஞ்சா செடிகளை கண்டுபிடித்து வேரோடு பிடுங்கி அழித்தனர். கூட்டுச் சோதனையில் மலை மீது 1200 அடி உயரத்தில் மூன்று அடுக்குகளில் 550 கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டதை கண்டுபிடித்தனர். இதன் மூலம் சுமார் ஒரு டன் அளவிற்கு காய்ந்த கஞ்சா தயாரிக்க முடியும் என்று போதை தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

    இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்றும் தெரிவித்தனர். அகழி டி.எஸ்.பி . முரளிதரன், புதூர் வனச்சரக அலுவலர் சுமேஷ், போதை தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் சிறப்புப் பிரிவு அலுவலர்கள் பென்னி, ஜேன் பவுலஸ் ஆகியோர் முன்னிலையில் கஞ்சா செடிகள் முழுமையாக அழிக்கப்பட்டன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு வழக்குப்பதிவு செய்து மலைப்பகுதியில் கஞ்சா செடிகள் வளர்த்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று காரமடை போலீசாருக்கு குடடையூர் பகுதியில் கஞ்சா செடி வளர்ப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பகுதியை சேர்ந்த காளிமுத்து (39) என்பவரது வீட்டின் பின்புறம் சோதனை செய்த போது அவர் 3½ அடிக்கு கஞ்சா செடி வளர்த்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கஞ்சா செடி வளர்த்த காளிமுத்தை கைது செய்தனர். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×