search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரி மாவட்டத்தில்  பெண் குழந்தைகள் வைப்புத் தொகை திட்டத்தில் 497 பேர் பயன்
    X

    நீலகிரி மாவட்டத்தில் பெண் குழந்தைகள் வைப்புத் தொகை திட்டத்தில் 497 பேர் பயன்

    • முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • 2 பெண் குழந்கைளுக்கும் தலா ரூ.25 ஆயிரம் என்ற அடிப்படையில் ரூ.50 ஆயிரம் பெறுவதற்கான பத்திரம் வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பெண்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்.

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், முதல்-அமைச்சரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் மூலம் 2-வது பெண் குழந்தைக்கு 3 வயது பூர்த்தியாகும் முன்பும், குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு குறைவாக உள்ள ஒரு பெண் குழந்தை மட்டுமே உள்ள குடும்பத்திற்கு பெண் குழந்தையின் பெயரில் ரூ.50 ஆயிரம் நிலையான வைப்புத்தொகையும், 2 பெண் குழந்தைகள் மட்டுமே இருக்கும் குடும்பத்தில், ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் தலா ரூ.25 ஆயிரமும் நிலையான வைப்புத்தொகை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு அந்நிறுவனத்தின் மூலம் பெண் குழந்தைகளின் பெயரில் வழங்கப்படுகிறது.

    முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையும், 2-வது பிரசவத்தில் 2 பெண் குழந்தைகள் பிறந்தாலும் 2 குழந்தைகளுக்கும் சிறப்பு இனமாக கருதி தலா ரூ.25 ஆயிரத்திற்க்கான பத்திரம் வழங்கப்படும்.

    18 வயது நிறை வடைந்தவுடன், மின்விசை நிதி நிறுவனம் மூலம் நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் பற்று வைக்கப்படும்.

    தமிழக அரசால் தொடங்கப்பட்ட திட்டங்களில் முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாகும்.

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், இத்திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் 7.5.2021 முதல் 21.2.2023 வரை ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய 4 வட்டங்களை சேர்ந்த 497 பயனாளிகள் ரூ.1.24 கோடி மதிப்பில் செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த குழந்தைகளின் தாயார் வித்யா கூறியதாவது:-

    நான் கோத்தகிரி இட்டக்கல் ஒன்னட்டி பகுதியில் வசித்து வருகிறோம். எனது கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். எனக்கு 10 வயதில் ஒரு பெண் குழந்தையும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். எங்கள் ஊரில் உள்ள களப்பணியாளர்கள் இரு பெண் குழந்தைகளுக்கு பணம் பெறும் திட்டம் குறித்து அறிவித்தனர். இதன் மூலம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பித்தேன்.

    எனது விண்ணப்பத்தினை ஏற்று 2 பெண் குழந்கைளுக்கும் தலா ரூ.25 ஆயிரம் என்ற அடிப்படையில் ரூ.50 ஆயிரம் பெறுவதற்கான பத்திரம் வழங்கப்பட்டது. இந்த தொகையின் மூலம் எங்கள் குழந்தைகளின் படிப்பு செலவினை மேற்கொள்ள உதவியாக இருக்கும். இத்திட்டத்தினை செயல்படுத்திய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தனர்.

    மேலும் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த குழந்தை களின் தாயார் மீனாட்சி கூறியதாவது:-

    நான் கூடலூர் அம்பலகொல்லி பகுதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் விவசாயம் செய்து வருகிறார்.

    எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சமூக நலத்துறையின் சார்பாக 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் மூலமாக உதவித்தொகை வழங்கப்படுவதாக களப்பணியாளர் மூலம் தெரிந்து கொண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பித்தோம்.

    அதன் அடிப்படையில் சமூக நலத்துறை சார்பில் 2 குழந்தைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் பற்று வைக்கப்பட்டு அதற்கான பத்திரம் வழங்கப்பட்டது. இத்தொகையானது எனது குழந்தைகளின் மேல் படிப்பிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தினை செயல்படுத்திய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தனர்.

    Next Story
    ×