search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபரை கடத்தி கொன்ற 4 பேர் கைது
    X

    வாலிபரை கடத்தி கொன்ற 4 பேர் கைது

    • கொலை செய்யப்பட்டு கிடந்தது ஓசூரில் மாயமான சல்மான் என உறுதி செய்யப்பட்டது.
    • காதல் விவகாரத்தில் சல்மான்கான் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    ஓசூர்,

    கர்நாடகா மாநிலம் கனகபுரா மாவட்டம் கங்கிலிபுறா பகுதியை சேர்ந்தவர் கலிமுல்லா. இவருடைய மகன் சல்மான்கான் (வயது 23). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர் ஓசூர் ராம்நகரில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து வந்தார்.

    மேலும் அந்த வீட்டில் இருந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்தார். இந்த நிலையில் அந்த சிறுமிக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதை அறிந்த சல்மான்கான் சிறுமி தன்னை காதலிக்கும் போது எடுத்த புகைப்படத்தை அனுப்பி திருமணத்தை நிறுத்தினார்.

    மீண்டும் சிறுமிக்கு திருமண ஏற்பாடுகளை நிறுத்த சல்மான்கான் முயற்சி செய்ததால் ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் சல்மான்கானை எச்சரித்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் 10-ந் தேதி சல்மான்கான் மாயமானார்.

    இது தொடர்பாக அவரது தாய் ஹாதாஜ் பானு கடந்த 26-ந் தேதி ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சல்மான்கானை தேடி வந்தனர். இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் தாவரக்கரே பகுதியில் குட்டை ஒன்றில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இது தொடர்பாக அந்த மாநில போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது ஓசூரில் மாயமான சல்மான் என உறுதி செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து இக்கொலை வழக்கு ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். அதில் காதல் விவகாரத்தில் சல்மான்கான் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக ஓசூர் ராம்நகரை சேர்ந்த ஜான்பாஷா (36), சாதிக் (45), வாஜித் (25), முகமது அலி (28) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    மேலும் இக்கொலையில், ஓசூர் தளி சாலையை சேர்ந்த ஸ்ரீகாந்த் (36), தர்மபுரி மாவட்டம் திருப்பாச்சிபுரத்தைச் சேர்ந்த கமலேசன் (28) ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்கள் சேலம சிறையில் அடைக்கப்பட்டனர். இக்கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×