என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடு-கோழி திருடிய 3 பேர் கைது
    X

    ஆடு-கோழி திருடிய 3 பேர் கைது

    • தருமபுரியில் ஆடு கோழி திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • திருடி செல்லும் காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளத்தில் பரவலாகி வைரலாகி வருகிறது.

    தருமபுரி அருகே கண்காணிப்பு கேமரா இருப்பதை தெரிந்தும் முகத்தை மறைத்துக் கொண்டு ஆடு மற்றும் கோழிகளை திருடி சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஆடு, கோழிகள் திருட்டு

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த கோடியூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் தனது விவசாய நிலத்தில் பண்ணை அமைத்து ஆடு கோழிகளை வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஆட்டுப்பண்ணையில் நுழைந்து ஆடுகளுக்கு தீவனம் வைத்துவிட்டு அதன் கதவை பூட்டாமலேயே வந்துள்ளார். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் கோழி, ஆட்டுப்பண்ணையில் நுழைந்து ஆடு மற்றும் 3 கோழிகளை பிடித்து சென்றுள்ளனர்.

    ஆடு மற்றும் கோழிகள் கத்தும் சத்தத்தை கேட்டு கிருஷ்ணன் வெளியில் வந்து பார்த்துள்ளார். அப்போது 3 வாலிபர்கள் ஆடு மற்றும் கோழிகளை திருடி மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி சென்றுள்ளனர்.

    மேலும் திருடப்பட்ட ஒரு ஆட்டின் விலை ரூ.6000 எனவும் 2 கோழிகளின் விலை ரூ.800 என மொத்தம் ரூ.6800 மதிப்பு ஆகும்.

    இதுகுறித்து கிருஷ்ணன் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    புகாரின் பேரில் அதியமான் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி. கேமிராவை ஆய்வு செய்தனர்.

    அப்போது 3 வாலிபர்கள் ஆட்டுப்பண்ணையில் நுழைந்து கோழி மற்றும் ஆடுகளை திருடி செல்லும் காட்சி அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

    அந்த காட்சியை வைத்து போலீசார் விசாரித்ததில் தடங்கம் பகுதியைச் சார்ந்த கந்தசாமி மகன் கமலக்கண்ணன்(20), மணி மகன் பிரேம்குமார்(23), ஜெகநாதன் ஆகிய 3 பேரும் ஆடு, கோழிகளை திருடியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. உடனே 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் 3 பேரும் ஆடு மற்றும் கோழிகளை திருடி செல்லும் காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளத்தில் பரவலாகி வைரலாகி வருகிறது.

    கைதானவர்களிடம் இருந்து ஆட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×