search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    ராமஜெயம் கொலை வழக்கு: ஐகோர்ட்டில் 8-ந்தேதி மீண்டும் விசாரணை அறிக்கை தாக்கல்

    கடந்த ஒரு மாத காலமாக சந்தேகத்துக்கு உட்பட்ட சுமார் 2,500 வாகனங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக விசாரணை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
    திருச்சி:

    தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். தொழில் அதிபரான இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 29-ந்தேதி அதிகாலை 5 மணியளவில் நடைபயிற்சி சென்றபோது மர்மநபர்களால் கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

    கொலையாளிகள் அவரது உடலை கட்டு கம்பியால் கட்டி திருச்சி கல்லணை சாலையில் திருவளர்ச்சோலை பொன்னி டெல்டா பகுதியில் காவிரி ஆற்றின் கரையோரம் வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. மற்றும் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. 10 ஆண்டுகள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

    இதையடுத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் மீண்டும் ராமஜெயம் கொலை வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட்டது. அதன்படி சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 15 நாட்களுக்கு ஒரு முறை விசாரணை அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர்.

    அதன் பின்னர் கோர்ட்டுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதால் இந்த மாதம் வருகிற 8-ந் தேதி ஒருமாத விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளனர். இதில் பிரபல ரவுடிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகப்படும் வெர்ஷா மாருதி வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.

    இதுபற்றி விசாரணை அதிகாரி ஒருவர் கூறும் போது, கடந்த ஒரு மாத காலமாக சந்தேகத்துக்கு உட்பட்ட சுமார் 2,500 வாகனங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. வெளிமாநிலங்களில் இருக்கும் வாகனங்களையும் விசாரிக்க இருக்கிறோம். பொதுமக்கள் நிறைய பேர் பல்வேறு தகவல்களை அளிக்கிறார்கள். பெரும்பாலான தகவல்கள் ஏற்கனவே கிடைத்த தகவல்களாகவே இருக்கின்றன. விரைவில் வழக்கில் முன்னேற்றம் கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.

    Next Story
    ×