search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    விழுப்புரத்தில் மின்கம்பம் சாய்ந்து விழுந்து பக்தர் பலி

    விழுப்புரத்தில் மின்கம்பம் சாய்ந்து விழுந்ததில் பக்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் புதுவை சாலையில் ரெயில்வே மேம்பாலம் அருகே தாயுமானவர் தெரு உள்ளது. இந்த தெருவில் முத்துமாரியம்மன் கோவில் அமையப்பெற்றுள்ளது. இந்த கோவிலின் வடக்கு வாசல் பகுதியில் மின்கம்பம் பழுதாகி நின்றது.

    இந்த மின் கம்பம் உள்ள இடத்தில் புதிதாக மின் கம்பம் நடப்பட்டது. ஆனால் பழுதான மின் கம்பத்தை அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டு விட்டு சென்றுள்ளனர்.

    இந்த கோவிலையொட்டி சிறிய விநாயகர் கோவிலும், வள்ளலார் மடமும் உள்ளது. இந்த மடத்துக்கு வள்ளலார் பக்தர்கள் இரவு நேரம் தங்குவார்கள். அதன்படி விழுப்புரம் கல்லூரி நகரை சேர்ந்த மணி (வயது 55), கடலூர் முதுநகரை சேர்ந்த ராமலிங்கம் மற்றும் சிலர் அங்கு தூங்கினர்.

    இன்று காலை திடீரென மின் கம்பம் சாய்ந்து விழுந்தது. இதில் மணி, ராமலிங்கம் ஆகியோர் இடிபாடுக்குள் சிக்கினர். அவர்கள் உயிருக்கு போராடினார்கள். இவர்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். ஆனால் மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து விழுப்புரம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், ஏட்டு ஆரோக்கியதாஸ், போலீஸ்காரர் கலைக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    மணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. படுகாயம் அடைந்த ராமலிங்கம் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×