search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தமிழகத்தில் இன்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 25 ஆயிரம் பேர் ஒரேநாளில் ஓய்வு

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆக மாற்றப்பட்ட நிலையில் முதல் முறையாக 25 ஆயிரம் பேர் பணியை நிறைவு செய்கிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் ஓய்வுபெறும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வயது 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தி அறிவித்தார்.

    2020-ம் ஆண்டு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் இந்த முக்கிய அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதன் காரணமாக 2020-ம் ஆண்டின் போது 58 வயது பூர்த்தியானவர்களுக்கு மேலும் 2 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் 2 வருடத்துக்கு முன்பு 58 வயது பூர்த்தியாகி பணி நீட்டிப்பு வழங்கப்பட்டவர்களுக்கு தற்போது 60 வயது நிறைவு பெறுகிறது. எனவே அவர்களின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.

    இதன்காரணமாக ஊரக வளர்ச்சித்துறை, உள்ளாட்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுமார் 25 ஆயிரம் பேர் இன்று ஒரே நாளில் பணி ஓய்வு பெறுகிறார்கள்.

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆக மாற்றப்பட்ட நிலையில் முதல் முறையாக 25 ஆயிரம் பேர் பணியை நிறைவு செய்கிறார்கள்.

    புதிய நடைமுறையின்படி கல்வியாண்டின் நடுவில் பணிக்காலத்தை நிறைவு செய்யும் ஆசிரியர்கள் கல்வியாண்டின் இறுதி வரை பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளனர். பணி ஓய்வு பெற்ற 25 ஆயிரம் பேருக்கும் ஓய்வூதிய பணம் வழங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.5 ஆயிரம் கோடி முதல் ரூ.8 ஆயிரம் கோடி வரை செலவாகும் என்று நிதித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    தமிழகத்தில் ஏற்கனவே 1.50 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது மேலும் 25 ஆயிரம் பணியிடங்கள் காலியாகிறது. இந்த காலி பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.

    Next Story
    ×