என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலையோர குப்பைகளுக்கு தீ வைப்பதால் வாகன ஓட்டிகள் அவதி
உடுமலை:
உடுமலை நகராட்சி 7.41 சதுர கி.மீ.பரப்பளவு கொண்டது.மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு பகுதிகளில் உள்ள வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை, நகராட்சி தூய்மை பணியாளர்கள் வீடு வீடாகசென்று சேகரித்து வருகின்றனர். அவை குறிப்பிட்ட இடங்களுக்கு கொண்டுவரப்பட்டதும், அங்கிருந்து வாகனம் மூலம் நகராட்சி குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
அப்படியிருந்தும் சில இடங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைக்கப்படுகின்றன. இதனால் அதில் இருந்து வரும் கரும்புகை, சாலைகளில் நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் செல்லும் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.
பழனியாண்டவர் நகர், முத்தையாபிள்ளை லே-அவுட் மற்றும் கிரீன் பார்க் லே-அவுட் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் கூட்ஸ்செட் சாலையில், சாலையின் ஓரம் கொட்டப்பட்டிருந்த குப்பைகளுக்கு தீ வைக்கப்பட்டதில், தீ கொழுந்து விட்டு எரிந்தது. சாலையோரம் குப்பைகளை கொட்டி தீ வைப்பதால், தீப்பொறி பறந்து சென்று விபத்துகள் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது.
அதனால் சாலைப்பகுதி உள்ளிட்ட இடங்களில் குப்பைகளுக்கு தீ வைக்கப்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டுனர்களும் எதிர்பார்க்கின்றனர்.






