search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் செய்தனர்
    X
    காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் செய்தனர்

    புஞ்சைபுளியம்பட்டி அருகே தண்ணீர் வசதி கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

    புஞ்சைபுளியம்பட்டி அருகே தண்ணீர் வசதி கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நல்லூர் ஊராட்சியில் கே.கே.நகர் உள்ளது. இங்கு புதிதாக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தொட்டியில் நல்ல தண்ணீர் ஊற்றி விநியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை நல்லூர் ஊராட்சி சார்பில் பணியாளர்கள் அந்த தண்ணீர் தொட்டியில் உப்பு தண்ணீர் ஏற்றுவதற்காக குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் கே.கே.நகர் பகுதி மக்கள் தண்ணீர் தொட்டி அமைந்திருக்கும் பகுதிக்கு திரண்டு வந்தனர்.

    பின்னர் தண்ணீர் தொட்டியில் நல்ல தண்ணீர் தான் ஏற்ற வேண்டும் என்று கூறி கே.கே.நகர் பகுதி பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் திடீரென புதுப்பாளையம் பிரிவு அருகே புளியம்பட்டி-பவானிசாகர் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் இருபுறமும் அணிவகுத்து நின்றன.

    இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×