என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுச்சேரி
    X
    புதுச்சேரி

    காரைக்காலை தமிழகத்தோடு இணைக்கக்கோரி சுவரொட்டி- புதுவை அரசியல் கட்சிகள் அதிர்ச்சி

    புதுவை ஆட்சியாளர்களால் காரைக்கால் மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு உள்ளது.

    புதுச்சேரி:

    பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட புதுவை யூனியன் பிரதேசமாக திகழ்ந்து வருகிறது.

    மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது யூனியன் பிரதேசமான புதுவையை தமிழகத்தோடு இணைக்க முயற்சி நடந்தது. இதற்கு எதிராக இணைப்பு எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கி அரசியல் கட்சிகள், அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.

    இதனால் இணைப்பு முயற்சி கைவிடப்பட்டது. இதனிடையே புதுவை ஆட்சியாளர்களால் காரைக்கால் மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு உள்ளது. இதனால் காரைக்கால் மாவட்டத்தை தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க கோரிக்கை எழுந்தது.

    இதற்காக தனி அமைப்பை உருவாக்கியும் போராட்டம் நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் தற்போது தமிழகத்தோடு காரைக்காலை இணைக்க வேண்டும் எனக்கோரி ஒரு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் சார்பில் காரைக்கால் முழுவதும் பிரதான சாலைகளில், மக்கள் கூடும் இடங்களில் சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.

    இந்த சுவரொட்டியில் அசிங்கம், அவமானம், வெட்கம், புதுவை அரசே நாங்கள் என்ன அநாதைகளா? என தலைப்பிட்டு, காரைக்கால் மக்களுக்கு காலம்காலமாக எந்தவித அரசு நலத்திட்டங்களும் வழங்காத புதுவை அரசை நாங்கள் புறக்கணிக்கிறோம். காரைக்காலை தமிழ் நாட்டோடு இணைப்போம். பொது வாக்கெடுப்பு நடத்த புதுவை அரசே தயாரா? என கேள்வி எழுப்பி சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

    இது புதுவை அரசியல்கட்சிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இணைப்புக்கு எதிரான போராட்டத்தில் காரைக்கால் மக்கள் துணைநின்றனர். ஆனால் இன்று காரைக்காலை தமிழகத்தோடு சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைக்காக ஒரு இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது அரசியல்கட்சிகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    4 பிராந்தியங்களையும் இணைந்து புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், காரைக்காலை தமிழகத்தோடு இணைப்போம் என இயக்கம் தொடங்கியிருப்பது மாநில அந்தஸ்து கோரிக்கைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×