search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை முயற்சி
    X
    தற்கொலை முயற்சி

    ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குழந்தையுடன் இளம்பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

    கணவர் வேறு திருமணம் செய்ததால் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குழந்தையுடன் இளம்பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா எண்ணமங்கலம் ஓங்காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரேமா (28).

    இவர் இன்று தனது குழந்தையுடன் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவர் திடீரென தான் கொண்டு வந்த மண்எண்ைண கேனை எடுத்து தன் மீதும், குழந்தை மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக ஓடி சென்று கேனை அவரிடமிருந்து பறித்தனர். பின்னர் அவர்கள் மீது போலீசார் தண்ணீர் ஊற்றினர். இதனால் அங்கு பரபரப்பானது.

    பின்னர் பிரேமா போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனக்கு அந்தியூர் மைக்கேல்பாளையத்தை சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. எங்கள் காதல் விவகாரம் அவரது பெற்றோருக்கு தெரியவந்தது. நாங்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவரது வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    இதையடுத்து நாங்கள் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி ஏற்காட்டில் உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். அதன் பின்னர் எனது தாயார் வீடான எண்ணமங்கலத்தில் குடும்பம் நடத்தி வந்தோம்.

    எனது கணவர் அடிக்கடி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று வருவார். நாங்கள் கடந்த 2019-ம் வருடம் ஜூன் மாதம் திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தோம்.

    இந்நிலையில் கடந்த 2019-ம் வருடம் டிசம்பர் மாதம் எனது கணவர் எம்.பி.ஏ.தேர்வு எழுத வேண்டியுள்ளதால் அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் என்னை அழைத்து செல்வதாக என்னிடம் கூறினார். நீண்ட நாட்களாக அவர் வந்து என்னை அழைத்து செல்லவில்லை.

    நான் எனது கணவரிடம் தொலைபேசியில் இதுகுறித்து கேட்டபோது எனது சாதிப்பெயரை சொல்லி என்னை தகாத வார்த்தையால் திட்டினார். மீண்டும் அவரிடம் பேசியபோது என்னை கொன்று விடுவதாக மிரட்டினார்.

    இது தொடர்பாக ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்திருந்தேன். இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதைத்தொடர்ந்து நான் பலமுறை எனது கணவர் வீட்டிற்கு சென்று என்னுடன் வாழும்படி கேட்ட போது எனது கணவரும் அவரது பெற்றோரும் என்னை தகாத வார்த்தைகளால் சொல்லி திட்டினர். மேலும் இங்கு வந்தால் உன்னை கொன்று விடுவதாகவும் மிரட்டினர்.

    இந்நிலையில் கடந்த 27-ந் தேதி எனது கணவருக்கும் கோவையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதுப்பற்றி கேள்விப்பட்ட நான் அதிர்ச்சியடைந்து இது குறித்து எனது கணவரிடம் கேட்டபோது. நீ கோவை வந்தால் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டினார்.

    இதுகுறித்து பவானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். அவர்கள் இன்று வா, நாளை வா என்று அழைத்தனர். எனவே என்னை திருமணம் செய்து ஏமாற்றிய எனது கணவர், அவரது பெற்றோர், உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
    Next Story
    ×