search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லணை சாலையின் குறுக்கே அபாயகரமான நிலையில் உள்ள கிணறு வடிவிலான கட்டமைப்பு.
    X
    கல்லணை சாலையின் குறுக்கே அபாயகரமான நிலையில் உள்ள கிணறு வடிவிலான கட்டமைப்பு.

    நெடுஞ்சாலையின் குறுக்கே அபாயகரமான பாலக் கேணி

    திருவையாறு அருகே நெடுஞ்சாலையின் குறுக்கே அபாயகரமாக விடப்பட்டுள்ள பாலக் கேணியை மூட வேண்டும் என குடிதாங்கி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருவையாறு:

    திருவையாறிலிருந்து மேற்கே 2 கிலோ மீட்டர் தொலைவில் கடுவெளி குடிதாங்கி கிராமத்தில் கல்லணை நெடுஞ்சாலையின் குறுக்கே கூத்தாடி மதகு பாலம் உள்ளது. காவிரி ஆற்றிலிருந்து வடபுறமாகப் பிரிந்து செல்லும் பாசன வாய்க்கால், இந்த ஒற்றைச் சாலையின் குறுக்கே செல்லுமிடத்தில் பழங்காலத்திலேயே மதகுகளுடன் கூடிய பாலமாகக் கட்டப்பட்டது.

    இந்தப் பாலத்தை அகலப்படுத்துவதற்காக, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் பாலத்தின் நடுவிலிருந்து வடபகுதியை முற்றிலும் இடித்துவிட்டு, அப்பகுதியில் புதிதாக பாலம் கட்டப்பட்டது. ஆனால், இடிக்கப்படாத பழைய பாலத்தின் தென்பகுதியுடன் புதியதாகக் கட்டப்பட்ட வடபகுதிப் பாலத்தை முழுவதும் இணைக்காமல், தொழில் நுட்பம் தெரியாததாலோ, போக்குவரத்தின் கவனத்தை ஈர்க்கும் நவீன கட்டுமானமாகவோ, சாலைப் பாலத்தின் நடுவில் வலுவில்லாத சுற்றுச் சுவருடன் திறந்த நிலை கிணறு வடிவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

    கட்டுமானத்தின்போதே, மேற்கிலிருந்து வந்த இருசக்கர வாகனம் அந்தக் கிணற்றில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் நடந்தது. இதைப் போலவே, மேற்கிலிருந்து வரும் வாகனங்கள் சாலை நடுவே உள்ள இந்தக் கிணற்றின் தடுப்புச் சுவரில் மோதி விபத்துள்ளாவது வழக்கமாக உள்ளது.

    எனவே, மாநில நெடுஞ்சாலையின் குறுக்கே அபாயகரமாக விடப்பட்டுள்ள பாலக் கேணியை இடைவெளியில்லாமல் இணைத்து விபத்து இல்லாத போக்குவரத்துக்கு ஆவன செய்து உதவுமாறு சம்மந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித்துறையினரிடம் கடுவெளி குடிதாங்கி கிராமவாசிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×