search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதல் திருமணம் செய்த தம்பதி ஊருக்குள் நுழைய தடை
    X
    காதல் திருமணம் செய்த தம்பதி ஊருக்குள் நுழைய தடை

    காதல் திருமணம் செய்த தம்பதி ஊருக்குள் நுழைய தடை- எஸ்.பி. ஆபீசில் கதறல்

    திண்டுக்கல் அருகே காதல் திருமணம் செய்த காதல் ஜோடி சொந்த ஊரில் நடக்கும் திருவிழா மற்றும் விஷேசங்களில் கலந்து கொள்ள முடியவில்லையே என விரக்தி அடைந்தனர்.
    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே செங்குறிச்சியை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது25). இவர் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள ஜவுளி கடைக்கு வேலைக்கு சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பெயிண்டரான அஜித்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இது நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதற்கு மாரியம்மாளின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்றபோதும் காதல் திருமணம் செய்ததால் உறவினர்கள் அவர்களை ஏற்க மறுத்தனர்.

    இதனால் சொந்த ஊருக்குள் மாரியம்மாள் மற்றும் அவரது கணவர் அஜித்குமார் ஆகியோர் நுழைய தடை விதித்தனர். மேலும் அவர்கள் குடும்பத்தில் நடைபெறும் விஷேசங்களுக்கும் இவர்களை அழைக்க கூடாது என கட்டுப்பாடு வித்தனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான காதல் ஜோடி சொந்த ஊரில் நடக்கும் திருவிழா மற்றும் விஷேசங்களில் கலந்து கொள்ள முடியவில்லையே என விரக்தி அடைந்தனர். எனவே இது குறித்து அவர்கள் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

    எஸ்.பி. உத்தரவின் பேரில் வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திண்டுக்கல் அருகே சிலுவத்தூர் சேத்தாம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது22). இவர் தனது உறவினரான சவுந்தர்யா (19) என்பவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி இடையகோட்டை அருகே உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    எம்.எம்.கோவிலூர் அருகே நாகம்பட்டியை சேர்ந்தவர் முருகசேன் (25). இவர் தனது உறவினரான கவுரி (20) என்பவரை காதலித்து வந்தார். ஆனால் வீட்டில் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு எழுந்தது. இதனால் அவர்கள் தாமரைப்பாடி காளியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    2 காதல் ஜோடியும் பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இன்ஸ்பெக்டர் ஜெயராணி காதல் ஜோடியின் பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்கள் மேஜர் என்பதால் காதல் ஜோடிகள் விருப்பபடி செல்லலாம் என அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×